dutch

வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பனிமனிதனின் பின்புறத்தில் ஒரு அம்பு தைத்திருந்தது.

அந்த அம்பு அவருடைய முக்கியத் தமனியை தாக்கியதால், ஏற்படுத்திய தாக்கத்தால் சில நிமிடங்களுக்குள் அவர் இறந்துவிட்டார்.

அவரது சடலம் பனிக்குள் புதைந்து, பாதுகாப்பாக இருந்தது. உலகில் பழமையான மற்றும் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட உடல்களில் ( மம்மி) ஒன்றாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது.

1991-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஓட்ஸியின் சடலத்தின் இடது தோளில் அம்பின் நுனி ஒன்று இருப்பது பத்து ஆண்டுகள் கழித்து, கண்டறியப்பட்டது. ஆனால், ஓட்ஸி எப்படி கொல்லப்பட்டார் என்ற விசாரணை சமீபத்திய மாதங்களில் தான் தொடங்கப்பட்டது. விசாரணையில் மூத்த காவல்துறை அதிகாரிகள் தலைமையிலான புலனாய்வாளர்கள் தீவிர கவனம் செலுத்துகின்றனர்.

இது கொலையா? ஓட்ஸியை யார் கொலை செய்தார்கள்?

ஓட்ஸியின் பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டிருக்கும் தெற்கு டைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தின் இயக்குனரான ஏஞ்செலிகா ஃப்லெகிங்கெர் தொழில்முறை புலனாய்வு தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார். மியூனிக் காவல்துறையில் துப்பறியும் துறையின் தலைமை ஆய்வாளர் அலெக்ஸாண்டர் ஹார்ன், பவேரிய காவல்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளும் நடத்தை சார்ந்த பகுப்பாய்வு திட்டத்தின் தலைவராகவும் உள்ளார்.

கோரிக்கை வைக்கப்பட்டபோது சற்று தான் அதிர்ச்சி அடைந்ததை அவர் ஒப்புக்கொள்கிறார்.

“மிகவும் பழமையான வழக்கில் நான் பணியாற்றமுடியுமா என்று என்னிடம் கேட்கப்பட்டபோது, ‘ஆம், நான் செய்கிறேன்’ என்று சொன்னேன், அது ஒரு வேடிக்கையான சூழ்நிலையாக இருந்தது”, என்று அலெக்ஸாண்டர் ஹார்ன் கூறினார்.

ஆனால், இந்த வழக்கோ மிகமிகப் பழமையானது.

“பொதுவாக, 20 அல்லது 30 ஆண்டுகள் பழமையான வழக்குகளை கையாண்டிருக்கிறேன், ஆனால், இது 5,300 ஆண்டுகள் பழமையான வழக்கு” என்று ஹார்ன் சொல்கிறார்.

ஆரம்பக்கட்டத்தில், இந்த வழக்கில் தன்னால் எதாவது செய்யமுடியுமா என்றே அவருக்கு புரிபடவில்லை.

“சடலம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அது மிகவும் நல்ல நிலையிலேயே, ஏன், இன்று நான் வேலைசெய்யும் பல சடலங்களை விட நல்ல நிலைலேயே இருக்கிறது.”

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், ஓட்ஸியின் வயிற்றின் உள்பகுதிகள், உடல் காயங்கள் குறித்த 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

“இது கொலையாக இருக்கலாம்,” என்ற ஹார்னின் கருத்தை நிரூபிக்க இவை முக்கியமானவையாக இருந்தது.

“தாக்கப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அவர் அங்கு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். மதிய உணவு அல்லது மாமிசத்தை ஒடிசி அதிகமாக உட்கொண்டிருந்தார், எனவே அவர் அவசரத்தில் இருந்ததாகவோ, தப்பிச் செல்லவோ முயன்றதாகவோ தெரியவில்லை.”

ஓட்ஸியின் உணவு பழக்கம், உடுத்தும் முறை மற்றும் அவரது நவீன சந்ததியினர் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்யமுடிந்தது

மற்றுமொரு முக்கியமான துப்பு அவரது வலது கையில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து கிடைத்த்து. கொலை நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட சண்டையால் காயம் ஏற்பட்டிருக்கலாம்.

“அது அவரது தற்காப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட காயம் என்று தெரிகிறது. கத்தியால் ஒருவர் அச்சுறுத்தும்போது, அதை பிடித்து இழுப்பது… தள்ளிவிட முயற்சிக்கும்போது ஏற்பட்ட காயமாக இருக்கலாம்.”

ஓட்ஸிக்கு வேறு எந்த காயங்களும் இல்லை என்பதால், அவர் முதற்கட்ட சண்டையில் வெற்றிபெற்றிருக்கலாம் என்றும், அந்த மோதலானது பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்திருக்கலாம் என்றும் ஹார்ன் நம்புகிறார்.

“ஓரிரு நாட்களுக்கு முன்பு நடந்த அந்த சண்டையின் தொடர்ச்சியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று நினைக்கிறோம்.”

ஓட்ஸியை நேரடியாக எதிர்த்து வெற்றி பெறமுடியாது என்று கருதிய கொலையாளி, அவரை திருட்டுத்தனமாக மலைக்கு பின்தொடர்ந்து வந்து, தாக்குதல் நடத்தியிருக்கலாம்.

அந்த பகுதியானது “மிகவும் தனிமையானது, ஒருவரை ஒருவர் துரத்தி பிடிக்க முடியாத இடம்”, என்று அலெக்ஸாண்டர் ஹார்ன் கூறுகிறார்.

ஆனால், யார் குற்றவாளி, அவரது நோக்கம் என்ன?

‘அவர் கொலையாளியை விட்டுவிட்டார்’

ஓட்ஸியின் மதிப்புமிகுந்த தாமிர கோடாரியை கொலையாளி திருடவில்லை என்பதால் கொலைக்கான காரணம் திருட்டாக இருக்க வாய்ப்பில்லை, “சில தனிப்பட்ட வலுவான உணர்வின்” காரணமாய் கொலை நடந்திருக்கலாம்.

“வெறுப்பு, பொறாமை, பழிவாங்குவது என்று காரணம் எதுவாக இருந்தாலும், கொலைக்கான காரணத்தை உறுதியாக நாம் சொல்ல முடியாது.”

ஓட்ஸியின் மரணத்தில் இருந்த மிகப் பெரிய மர்மத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் மகிழ்ச்சியளிப்பதாக தொல்லியல் அருங்காட்சியகத்தின் இயக்குனரான ஏஞ்செலிகா ஃப்லெகிங்கெர் கூறுகிறார்.

ஆனால், ஹார்னுக்கு இது திருப்தியளிக்கவில்லை.

“அந்த வழக்கை தீர்த்து வைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தோன்றவில்லை.” என்று அவர் கூறுகிறார்.

கொலையாளி, குற்றத்தில் இருந்து தப்பிப்பது புலனாய்வின் பொறுப்பாளராக இருக்கும் எனக்கு பிடிக்கவில்லை என்று வறண்ட புன்னகையுடன் கூறும் அலெக்ஸ்சாண்டர் ஹார்ன், “கொலைக்குற்றம் தீர்க்கப்படாமல் இருப்பதை நான் விரும்பவில்லை” என்கிறார்.