Engineering Colleges-Tamilnadu

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கவும், பிகாம் போன்ற வணிகவியல் கல்வியில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஒரு லட்சம் இடங்கள் காலி

இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. 2016-17-ம் ஆண்டில் பொறியியல் படிப்புகளில் 2,77,061 இடங்கள் இருந்தன. ஆனால், 1,34,994 மாணவர்கள் மட்டும்தான் படிப்புகளில் சேர விண்ணப்பம் செய்திருந்தனர். ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் கடந்த ஆண்டு காலியாகவே இருந்தன. தமிழகத்தில் முதல் 200 இடத்தில் உள்ள கல்லூரிகள் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பி இருந்தன. 55 கல்லூரிகளில் நூறுக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்திருக்கின்றனர். தொழில்நுட்ப இயக்குனரகம் அளித்துள்ள தகவலின்படி சுயநிதி கல்லூரிகளில் உள்ள 52 சதவிகிதப் பொறியியல் இடங்கள் மட்டும்தான் நிரம்பியிருக்கின்றன. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 82 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன.

முடுவதற்கு விண்ணப்பம்

கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரிகளை மூட அனுமதி கேட்டு நிறைய மனுக்கள் வருவதாகத் தெரிகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அளித்துள்ள தகவலின்படி தமிழகத்தில் 22 தனியார் கல்லூரிகள், மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த கல்லூரிகளை மூட தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்ப்பது குறித்த நடைமுறைகள் முடிந்த பிறகு மூடுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்கிறார்கள்.

2016-17-ம் கல்வி ஆண்டில் 22 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இந்த சூழ்நிலையில்தான் கடந்த சில மாதங்களாகவே, பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு என்ற விளம்பரங்கள் இணையதளங்களில் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. ஒரு பொறியியல் கல்லூரியின் விலை 25 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை சொல்கிறார்கள். இது போன்ற பொறியியல் கல்லூரிகள் பெரும்பாலும் உள்கட்டமைப்பு வசதிகள் அற்றதாகவே இருக்கிறது.

மாணவர்கள் சேர்க்கை கூடாது

பொறியியல் கல்விக்கான மோகம் குறைந்து வருவதால், லட்சக் கணக்கான ரூபாய் டொனேஷன் கொடுத்து படிக்கும் சூழலில் மாணவர்கள் இல்லை. இதனால், பல தனியார் கல்லூரிகள் அரசு கல்வி கட்டணம் செலுத்தினால் போதுமானது. டொனேஷன் தேவையில்லை என்றெல்லாம் விளம்பரம் செய்தனர். எனினும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டவில்லை. மாணவர் சேர்க்கைக் குறைந்துள்ளதால் பல கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியவில்லை என்கிறார்கள். மாணவர்களுக்கு பொறியியல் கல்வி மேல் ஆர்வம் குறைந்துள்ளதால், கல்லூரியை கைமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். மேலும் சிலர் கல்லூரியை மூடிவிட்டு வேறு வியாபாரத்தில் இறங்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம். மூடுவதற்கு விண்ணபிக்கும் கல்லூரிகளிடம், முழுமையாக மூடாமல் ஒரு சில பிரிவுகளை மட்டும் மூடும் படி சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மை காலமாக பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால்தான் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கான மோகம் குறைந்துள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பலர், ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத விண்ணப்பம் செய்கின்றனர். அதே போல வங்கி போட்டித்தேர்வுகளிலும் பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்குக்கூட விண்ணப்பம் செய்கின்றனர். பல பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு தகுதியே போதுமானதாகக் கருதப்படும் வி.ஏ.ஓ தேர்வுக்குக் கூட விண்ணப்பம் செய்தனர். இன்னும் சில நாட்களில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளி வர உள்ள நிலையில் இந்த ஆண்டும் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றே தெரிகிறது.