Tamil Cinema News | சினிமா செய்திகள்
உடைகளை ஏலம் விடும் எந்திரன் நாயகன்..
எந்திரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் அக்ஷய் குமார் தனது படத்தில் அணிந்திருந்த உடைகளை ஏலம் விடப்போகிறார்.
பாலிவுட்டின் ஸ்டார் ஐகானாக இருப்பவர் அக்ஷய் குமார். ஒவ்வொரு படங்களை பலகட்ட யோசனைக்கு பிறகே ஒப்புக்கொள்ளும் அக்ஷய், அதற்காக தன் முழு பங்கீட்டை தருவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.ஓ படத்தில் வில்லனாக கோலிவுட்டில் கால் பதிக்கிறார். தொடர்ந்து, இப்படத்தில் ரஜினியை விட அக்ஷயிற்கு அதிக தோற்றங்கள் என படக்குழுவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2016ம் ஆண்டு வெளியான ருஷ்டம் படத்தில் அணிந்திருந்த உடைகளை ஏலம் விட அக்ஷய் குமார் முடிவு செய்திருக்கிறார். ருஷ்டம் படத்தினை டினு சுரேஷ் தேசாய் இயக்கினார். 1950ல் நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டு இருந்த இப்படத்தை நிராஜ் பாண்டே தயாரித்து இருந்தார். இலியானா நாயகியாக நடித்திருந்தார். அக்ஷய் கப்பல் படை அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதில், அக்ஷயின் நடிப்பிற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. படம் முழுக்க கப்பற்படை அதிகாரியின் வெள்ளை உடையே அதிகமாக அக்ஷய் அணிந்துருந்தார்.
இதை தொடர்ந்து, ருஷ்டம் உடைகள் ஏலம் குறித்த தகவல்கள் முன்னரே இணையத்தில் வெளியானாலும், தற்போது டுவிட்டர் மூலம் அக்ஷய் உறுதிப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து, இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் அக்ஷய், சில விஷயங்கள் என் மனதுக்கு நெருக்கமாகி விடும். அது போல தான் ருஷ்டம் படத்தில் கப்பற்படை அதிகாரியாக நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு புது உத்வேகத்தை தந்தது எனத் தெரிவித்தார்.
ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கும் தொகை விலங்குகள் பாதுகாப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
