Neduvasal-Jallikattu

ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் மதுரை அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டத்தை மேலும் வீரியப்படுத்த சென்னை மெரினாவில் ஐ.டி., இளைஞர்கள் ஒன்றுகூடி பல்லாயிரக்கணக்கானோரை அறப்போராட்டத்தில்  ஈடுபட வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய, மாநில அரசுகளை மட்டுமல்லாது இவ்வுலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். உலக சாதனையாக கருதப்பட்ட இந்த அறப்போராட்டம் பெரும் வெற்றியையும் தேடித்தந்தது.

இளைஞர்கள் பெற்றுத்தந்த இந்த சாதனை வெற்றியை, தமிழர்களின் மனதில் அளவில்லா நம்பிக்கையை அவர்கள் மீது ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் லஞ்ச ஊழலற்ற ஓர் உலகத்தை உருவாக்குவார்கள் என்றும் அப்போது குரல் கொடுத்து வந்தனர்.

ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், சென்னை எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கச்சா எண்ணை கசிந்து கடலில் கலந்ததால் பொதுமக்களை பாதிக்காமல் இருக்க எண்ணை கழிவுகளை அகற்றும் பணியில் இளைஞர்களே முதலில் குதித்தனர். அதுமட்டுமின்றி தற்போது நடந்துவரும் ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து முதலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் ஐ.டி., இளைஞர்களே.

இவ்வாறு தமிழர்களின் மத்தியில் அளவில்லா நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள இளைஞர்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாடு இளைஞர் கட்சி ஒன்றை உருவாக்கியிருந்தாலும், தனிப்பட்ட கட்சியே.

ஜல்லிக்கட்டு போராளிகள் ஒன்றிணைந்து, உண்மையான இளைஞர்கள் கட்சியை தற்போது உருவாக்கியுள்ளனர். ‘‘என் தேசம் என் உரிமை’’ என்ற கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினர். இதற்கான அறிவிப்பை தலைமை ஒருங்கிணைப்பாளர் எபினேசர் நேற்று ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.