நடிகர் கோபி காந்தி நடிக்கும் ‘வைரமகன்’ படத்தின் பாடல்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் “சமூக உணர்வுகள்” (இரத்த தானம்) “கண்ணீர் அஞ்சலி” (மது பாதிப்பு), “பசுமை” (மரக்கன்றுகளின் பயன்), “முயற்சி” (தன்னம்பிக்கை விழிப்புணர்வு) ஆகிய பல்வேறு சமுதாய விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து நடித்த கோபி காந்தி “முதல் மாணவன்” படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது “வீரக்கலை”, “வைரமகன்” இரண்டு படங்களையும் தயாரித்து நடித்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக இந்தப் படங்கள் வெளியாகும் அன்றே அவற்றின் டி.வி.டி. வெளியிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து பெரிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த “வைரமகன்” திரைப்படம் அம்மாவின் பாசத்தை எடுத்துச் சொல்லும் படமாக அமைந்துள்ளது. இதில் கோபி காந்தி விவசாயத் தொழிலாளியாக நடித்துள்ளார்.

 

இந்தப் படத்தில் விவசாயிகளின் பெருமையை சொல்லும் தத்துவ கருத்துப் பாடல் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல் வரிகளைப் போல் இடம் பெற்றுள்ளது.

“வெட்ட வெட்ட குனிஞ்சவன், வெயில வாங்கி குடிச்சவன், வியர்வையில் குளிக்கிறவன் விவசாயி”, “சொட்ட சொட்ட நனைஞ்சவன் தூக்கி தூக்கி சுமக்கிறான், சேத்துக்குள்ள தோப்புக்குள்ள தொழிலாளி…” என்ற தத்துவ கருத்து பாடலை விவசாயிகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து கோபிகாந்தி கூறும்போது, ‘தமிழக முதல்வர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். விவசாயிகளின் கஷ்டம் அவருக்கு நன்றாகத் தெரியும்.

விவசாய மேம்பாட்டுக்கும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் முன்னாள் முதல்வர் “அம்மா” அவர்களின் வழியில் கண்டிப்பாக சிறப்பாக செயலாற்றுவார். விவசாயிகளின் பெருமையை சொல்லும் பாடல்களை வெளியிட கேட்டுக் கொண்டவுடன் உடனடியாக வெளியிட சம்மதம் தெரிவித்து வெளியிட்டார்.

தற்போது அந்தப் பாடல் அனைத்து விவசாயிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்’ என்று கோபிகாந்தி கூறினார். இவ்விழாவில் “வைரமகன்” திரைப்பட இயக்குநர் முருகவேல், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.சூர்யா, உள்ளிட்ட படக் குழுவினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.