ரேஷன் கடையில் ரூ1000.. கரண்ட் பில் ரூ10000.. இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லையே இருந்துருக்கலாம்

கொரோனாவின் பாதிப்பு ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே போனாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று திரும்பி கொண்டு தான் வருகிறது. அந்த நிலையில் இன்று ஒரு சில தளர்வுகளுடன் சென்னை மக்கள் இயங்க ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் கொரோனா பதிப்பின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு குறையவே இல்லை.

இந்த நிலையில் மின்சார வாரியத்தின், மின்சார கட்டணம் மக்களை அச்சுறுத்தி உள்ளது. பொருளாதார ரீதியாக சரியாக பணிக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மின்சாரக்கட்டணம் நான்கு மாதங்களுக்கு மொத்தமாக போடப்பட்டுள்ளது.

அதாவது கடந்த மார்ச் மாதம் மின்சார ஊழியர்களால் ரீடிங் எடுக்க முடியாததால், ஜனவரி மாதம் என்ன யூனிட்டோ அதே தொகையை கட்ட சொல்லிவிட்டனர். அதையும் மக்கள் செய்து விட்டனர்,

ஆனால் தற்போது மொத்தமாக நான்கு மாதங்களுக்கு உள்ள மொத்த யூனிட்டை கணக்கிட்டு பில்லை போட்டுள்ளனர். அதில் கடந்த மாதத்தில் கட்டிய தொகையை மட்டும் கழித்துவிட்டு  நான்கு மாதத்திற்கு மொத்தமாக போட்ட பில்லை கட்ட சொல்லிவிட்டனர்.

இப்படி செய்தால் மின்சார வாரியத்தின் 500 யூனிட்டுக்கு மேலே செல்லும் ஸ்லாட்டில் சாதரணமாக மக்கள் போய்விடுவார்கள். அப்படி சென்றால் கட்டவேண்டிய தொகை பல மடங்கு அதிகமாக வரும்.

எடுத்துகாட்டு:-

ஜனவரி – 410 unit : Paid 860 rupees

மார்ச் – 410 unit : Paid 860 rupees (PMC – previous month consumption)

மே – 1770 unit : இதை இரண்டு மாதத்திற்கு பிரிக்கிறார்கள். அதாவது 1770 / 2 = 885 units (March – 885 units, May – 885 units)

மொத்தமாக 4 மாதத்திற்கு கட்டவேண்டிய பணம் Rs.8542 – Rs.860 (கடைசியா கட்டிய தொகை) = Rs.7782/-

அதாவது மின்சாரத்தின் யூனிட்டை கழிக்காமல் கடைசியாக கட்டின மின்சாரத்தின் தொகையை கழித்து உள்ளனர். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் சோத்துக்கு வழியில்லாமல் இருக்கும் நிலையில் இப்படி மக்களிடமிருந்து சுரண்டப்படுவதை யார்தான் கேள்வி கேட்பது என்று தெரியவில்லை.

இப்படி ஒரு புறம் வசூல் பண்ணும் காசை மறுபுறம் இலவசமாக ரேஷன் கடையில் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதற்கு தான் ஜூலை 15 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு மக்களை மூளை சலவை செய்து உள்ளனர்.

மக்களும் இருக்கிற சூழ்நிலையில் இது வேற மண்டை குடைச்சல் என்று அந்த தொகையை கட்டி விடுகின்றனர். அக்கட தேசத்தில் மக்களுக்கு இறங்கி வேலை செய்யும் முதல்வரும், ஆட்சியாளர்களும் இருப்பதைப் பார்த்து கூட இந்த சமுதாயம் எப்படி திருந்த போகிறதோ தெரியல.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் மளிகை பொருட்களை, அதாவது சூப்பர் மார்க்கெட்டில் நாம் வாங்கும் மளிகை பொருட்களை மக்களுக்கு இலவசமாக பினராய் விஜயன் அரசு வீட்டிலேயே கொண்டு போய் சேர்கிறது, இந்த அரசு போல் தமிழ்நாட்டில் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

இருந்தாலும் நியாயமான மின்சார தொகையை மக்களிடம் பெற்றால் இப்போ இருக்கும் சூழ்நிலையில் மக்கள் வச்சு கொண்டாடுவாங்க, இதற்கு அரசாங்கமே முன்வந்து மக்களுக்கான உதவியை செய்ய வேண்டும் இல்லை என்றால் எப்பொழுது போல் மூளை சலவை செய்யப்பட்ட செய்தியாகவே இருந்துவிடும்.