தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் வருகின்றது. இதில் வெளிவராமல் பெட்டியில் தூங்கிய படங்கள் 200-யே தாண்டும். அந்த வகையில் சில முன்னணி நடிகர்கள் படங்கள் கூட வெளிவருவதற்கு தடுமாறும்.

அஜித் நடித்த வரலாறு, விஜய் நடித்த உதயா, சிம்புவின் வாலு, இது நம்ம ஆளு(இன்னும் எத்தனையோ!), தற்போது விஷாலின் மதகஜராஜா. ஆனால், இந்த படங்களாவது வந்துவிட்டது, வந்துவிடும்.

ஆனால், சில படங்கள் ரசிகர்களின் ஆசை தூண்டும் விதத்தில் பூஜை போட்டு சில நாட்களிலேயே ட்ராப் ஆன படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் எந்த ஒரு படத்தையும் மிகவும் நிதானமாக யோசித்து தான் ஓகே சொல்வார். ஆனால், அவரின் பேவரட் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் என்ற படத்தில் நடித்த இருந்தது, ஆனால், அந்த படம் ஒரு சில காரணங்களால் பூஜையுடன் நிற்க, பிறகு அதில் சரத்குமார் நடித்தார்.

மீண்டும் கே.எஸுடன் ராணா படத்தில் ரஜினி நடிக்க பூஜை போட்ட போது ரஜினிக்கு ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால் அந்த படமும் கைவிட்டு, கோச்சடையான் அனிமேஷனில் உருவானது. இந்த இரண்டு படங்களுமே தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன்

கமல்ஹாசனின் மருதநாயகம் பாதி கடல் தாண்டி சுமார் 15 வருடங்களுக்கு மேல் மீதிக்கடல் தாண்ட முடியாமல் தவித்து வருகின்றது, விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகின்றது.

இது ஒருபுறம் இருக்க இந்திய சினிமாவியே வசூலில் மிரட்டிய எந்திரன் படத்தில் முதலில் கமல் தான் நடிக்கவிருந்தார். பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டு அதில் ரஜினி நடித்தார்.

அதேபோல் மன்மதன் அம்பு படத்திற்கு முன் தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது, அந்த படம் பேச்சு வார்த்தை வரை வந்து கைவிடப்பட்டது.

விஜய்

இளைய தளபதி விஜய்க்கும் இப்படி சில படங்கள் ஆகியுள்ளது, சூர்யா நடித்த உன்னை நினைத்து படம் முதலில் இவரை வைத்து தான் இயக்குவதாக இருந்தது, பூஜை எல்லாம் போட்டு பின் இந்த படம் நின்றது.

பிறகு கௌதம் மேனனுடம் யோகன் படத்தின் பர்ஸ்ட் லுக் வரை சென்று அந்த படமும் நின்றது.

அஜித்

அஜித்திற்கு இதுபோல் எண்ணிலடங்கா படங்கள் உள்ளது, இவர் பல படங்களை தவற விட்டு அந்த படங்கள் வேறு ஒரு நடிகர் நடித்து வசூல் சாதனை படைத்தது நாம் அறிந்ததே, இந்நிலையில் பூஜை போட்டு பர்ஸ்ட் லுக் வரை வந்து அஜித்திற்கு நின்ற படங்கள், நியூ, மகா, ஏறுமுகம், மிரட்டல் ஆகிய படங்கள்.

விக்ரம்

விக்ரமும் ஒரு படத்திற்கு கமிட் ஆவதில் பல முறை யோசிப்பார். அந்த வகையில் கரிகாலன் என்ற படத்தில் விக்ரம் நடிப்பதாக டீசர் வரை வந்து நின்றது.

சூர்யா

சூர்யா தன் பேவரட் இயக்குனர் கௌதம் மேனனுடன் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின் சில மன சங்கடத்தால் அந்த படம் ட்ராப் ஆனது.

சிம்பு

சிம்பு பல படங்களுக்கு பர்ஸ்ட் லுக் மட்டுமே விட்டுள்ளார், சொல்ல முடியாது அந்த படத்தின் டீசர்ஸ் வரும் நாட்களில் வந்துக்கொண்டே இருக்கலாம். இதில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ஏசி, சிம்புவே இயக்க நினைத்த வாலிபன், கெட்டவன் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தனுஷ்

தனுஷ் இரண்டு படங்களை தவறவிட்டுள்ளார், அந்த இரண்டு படங்களுமே தன் அண்ணனின் படங்கள் தான், இரண்டாம் உலகம் மற்றும் மாலை நேரத்து மயக்கம்.