சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் விடிய விடிய மன்னார்குடி தரப்பு உற்சாகமாக கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த வெற்றியை கொண்டாட, போயஸ் கார்டனில் சசிகலா அணியினருக்கு உற்சாகமாக விருந்து கொடுத்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது மன்னார்குடி குடும்பத்தின் வசம் உள்ள போயஸ் கார்டனில் இந்த கொண்டாட்டம் நடந்துள்ளது.

சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதால், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் பங்களாவை பயன்படுத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூவத்தூர் விடுதியிலிருந்து எம்.எல்.ஏக்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதனைதொடர்ந்து, கூவத்தூர் விடுதி மூடப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், போயஸ் கார்டனை மினி கூவத்தூராக மாற்றினர் சசிகலா அணியினர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு , அதிமுக எம்.எல்.ஏக்கள் 122 பேரும், சுமார் 11 நாட்கள், சென்னை அருகே அமைந்துள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

அங்கு எம்.எல்.ஏக்கள், மிக விமரிசையாக சுற்றுலா சென்றதை போல கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் எதிர்கட்சிகளோ, அவர்களை மன்னார்குடி தரப்பு சிறை வைத்துள்ளதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.