மறுபடியும் காதல் என்ற படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர் தற்போது இயக்கியுள்ள படம் பள்ளி பருவத்திலே. இதில் இசை அமைப்பாளர் சிற்பி மகன் நந்தன்ராம், காதல் கசக்குதய்யா படத்தின் நாயகி வெண்பா நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஆர்.கே.சுரேஷ், தம்பி ராமய்யா, பொன்வண்ணன், ஊர்வசி, சுஜாதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் படத்திற்காக தான் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் கூறியதாவது:தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்லாம்பட்டு எனது சொந்த கிராமம். இந்த கிராமத்தில் இருந்த அரசு பள்ளியின் தலைமையாசியரியாக ஒருவர் இருந்தார். 100 பேர் படித்த பள்ளியை அவர் 2 ஆயிரம் பேர் படிக்கும் பள்ளியாக மாற்றினார். நல்லாசிரியர் விருது பெற்றார். ஊரே அவரை மெச்சியது. ஆனால் அவரது சொந்த மகன் ஊதாரியாக எதற்கும் உதவாதவனாக வளர்ந்தான்.

ஊர் பிள்ளைகளை கல்வி ஊட்டி வளர்த்தவர் தன் சொந்த பிள்ளையை வளர்க்கத் தவறி விட்டார். இதை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறேன். அந்த ஆசிரியர் கேரக்டரில் நடிக்க பொருத்தமானவர் கே.எஸ்.ரவிகுமார் என்ற முடிவு செய்து அவரிடம் கதை சொன்னேன். ஒரு புதுமுக இயக்குனர் என்றும் பார்க்காமல் கதை பிடித்து நடித்துக் கொடுத்தார்.

அந்த கேரக்டரும், அதை நான் படமாக்கிய விதமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் கடைசி நாள் அன்று என்னை அழைத்துப் பாராட்டிய அவர்… “இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும், தேசிய விருதும் வாங்கும். இப்படி ஒரு நல்ல ப்ராஜக்டில் வேலை செய்ததற்காக பெருமைப்படுகிறேன்.எனக்கு சம்பளம் வேண்டாம்” என்று கூறிவிட்டுச் சென்றார். சென்றதோடு மட்டுமில்லாமல் அதுவரை வாங்கிய சம்பளத்தை தனது உதவியாளர் மூலம் கொடுத்து அனுப்பி விட்டார். என்கிறார் வாசுதேவ் பாஸ்கர்.