விஜய் நடித்து தீபாவளியன்று திரைக்கு வரவுள்ள மெர்சல் படத்தை இணையதளத்தில் பதிவேற்றி வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மெர்சல் திரைப்படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஜய் நடிப்பில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளி முதல் திரையிடப்படவுள்ளது.

vijay

வழக்கமாக புதுப்படங்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுவதால் படத்தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே மெர்சல் திரைப்படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட சம்பந்தப்பட்ட இணைய சேவை நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மெர்சல் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு 2 ஆயிரத்து 650 இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதித்தும், இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

mersal magic
mersal magic

ஆனால் இதற்கிடையில் தீபாவளி விருந்தாகத் திரைக்கு வரும் மெர்சல் படத்தை இணையதளத்தில் ரிலீஸ் செய்ய மாட்டோம் எனத் தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளனர்.

தமிழ்த் திரை உலகிற்குச் சிம்ம சொப்பனமாக விளங்குகின்றது தமிழ் ராக்கர்ஸ் குழு. புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியான 2 நாட்களில் அவற்றை இணையதளத்தில் இந்தக் குழு பதிவேற்றி விடுகிறது.

இதனால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளது. தமிழ் நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் விஷால் தமிழ் ராக்கர்ஸை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார். ஆனால் தற்போது வரை அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.

vijay mersal

இந்த நிலையில், தீபாவளி அன்று திரைக்கு வரும் நடிகர் விஜயின் மெர்சல் படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டோம் எனத் தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், “மெர்சல் படத்தை தமிழ் ராக்கர்ஸில் வெளியிட மாட்டோம். #மெர்சல் தீபாவளி. #ஆளப்போறான் தமிழன். ஆல் தி பெஸ்ட் டீம் மெர்சல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் மெர்சல் படத்திற்கான டிக்கெட் முன்பதிவானது துவங்கி உள்ளது.