மனிதர்களின் மிகச்சிறந்த நண்பனாகத் திகழும் நாய்கள் சில நேரம் செய்யும் சேட்டைகள் ரசிக்கத்தக்கவையாக இருப்பதில்லை. அப்படி ஒரு சம்பவம்தான் சீனாவின் ஜியாங்ஷூ மாகாணத்தில் நடந்துள்ளது. அங்குள்ள சிறிய நகரம் ஒன்றில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ ஒன்று, போன் ரிப்பேர் செய்யும் கடைக்குள் புகுந்து விபத்தை ஏற்பட்டது. ஆட்டோ கடையை நோக்கி வேகமாக வருவதை அறிந்த பணியாளர்கள், முன்னெச்சரிக்கையாக நகர்ந்துகொண்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

ஆனால், கடையின் ஒரு பகுதி ஆட்டோ மோதியதால் சேதமடைந்தது. விபத்தை அடுத்து ஓட்டுநர் இருக்கையில் இருப்பவர் யார் எனத் தேடிய செல்போன் கடை ஊழியர்களுக்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அந்த ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தது ஒரு நாய். ஆமாங்க, நாய் ஒன்று அந்த ஆட்டோவை ஓட்டி வந்துள்ளது தெரியவந்தது.

ஆட்டோ விபத்து கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த களேபரங்கள் எல்லாம் முடிந்த பின்னர், ஆட்டோ மற்றும் நாயின் எஜமானர் பரபரக்க ஓடி வந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததில், நாயுடன் ஷாப்பிங் வந்த அவர், பழக்கடை ஒன்றின் முன் ஆட்டோவில் நாயை இருத்திவிட்டு கடைக்குள் சென்றிருக்கிறார். ஆனால், கடைக்குள் செல்லும் முன் அவர் வண்டியை ஆஃப் செய்யவில்லை. இதனால், ஸ்டார்டிங் நிலையிலேயே இருந்த ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் விளையாட்டாக ஏறி அமர்ந்த நாய், ஆக்ஸிலேட்டரை அழுத்தவே வண்டி ஓடத் தொடங்கியிருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தூரம் வண்டியை ஓட்டிவந்த நாய், கடைசியாக செல்போன் ரிப்பேர் செய்யும் கடைக்குள் புகுந்துள்ளது. முதலில் இந்த கதையை கடைக்காரர் நம்பவில்லை. ஆனால், கடையில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆட்டோக்காரர் சொல்வதை உண்மை என்பதை உணரவைத்தன. அந்த சிசிடிவி காட்சிகள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காரணம், ஆட்டோ ஓனரும், அந்த கடைக்காரரும் சமாதானமாகப் போய்விடுவதாகக் கூறியதுதான். ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட சேதத்துக்காக இழப்பீடை செல்போன் கடைக்காரருக்கு, ஆட்டோ ஓனர் அளித்து சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆகவே, நண்பர்களே செல்லப்பிராணிகளை வண்டியில் அமரவைத்து விட்டு வெளியில் செல்லும்போது வண்டியை ஆஃப் செய்து சாவியைக் கையோடு எடுத்துவிட்டுச் செல்வது நல்லது. குறிப்பாக நாய்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!.