வறுமையில் வாடும் பல குடும்பங்களுக்கு விடிவெள்ளியாக தெரிவது அவர்களது குழந்தைகள் தான். தினமும் நல்லா படி பெரிய இடத்துக்கு வேலைக்கு போனா எல்லாம் சரியாகிடும்.பெரிய படிப்பு படிக்கணும் என்ற ஒற்றை ஒளிக்கீற்று தான் அவர்களது ஒரே நம்பிக்கையாய் இருக்கும்.

வறுமை சூழ்ந்த வீடு, சாதி ரீதியிலான அடக்குமுறைகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தம், ஒரு வேலை உணவுக்கே வழியில்லாத போது கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைபடுவதா என்று இல்லாமல் விடாப்பிடியாக வறுமையுடன் போராடி கல்வியில் ஜெயித்து இந்த சமூகத்தின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது அனிதா மட்டுமா?

ரோஹித் வேமுலா :

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர். மத்திய அமைச்சர்களின் நெருக்கதலால் ரோஹித் உட்பட ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்கள். தங்குவதற்கு விடுதி அறையும் மறுக்கப்பட்டது.

ஐவரும் வெளியேறாமல் பல்கலைக்கழகத்திலேயே கூடாரம் அமைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் இரண்டு வாரங்களாய் தொடர்ந்த போதும், நிர்வாகம் அதற்கு செவி சாய்க்க வில்லை. அவருக்கு கிடைக்க வேண்டிய ஸ்காலர்ஷிப்பும் நிறுத்தப்பட்டது.

காவலாளியான தந்தை தையல் தொழிலாளியான தாய் என மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த ரோஹித்தின் படிப்பு தான் அவர்கள் குடும்பமே மேலே எழுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.

ஆனால் இந்த சமூகம், அரசு, வறுமை ஆகியவை கொடுத்த அழுத்தம் காரணமாக மனவுளைச்சலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சரவணன் :

மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த சரவணன் எய்ம்ஸ் நடத்தும் பட்ட மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதினார். இதில் 74 வது ரேங்க் பெற்ற சரவணனுக்கு பேத்தாலஜி பிரிவு கிடைத்தது. ஆனால் பொது மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய சரவணன் 2016 ஆண்டும் எய்ம்ஸ் தேர்வு எழுதினார் அதில் 47 வது ரேங்க் கிடைத்தது. பொது மருத்துவமும் கிடைத்தது.

பொது மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக தன்னம்பிக்கையுடன் போராடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று 47வது இடம் பிடித்த சரவணன் ஒரு நாள் மாலை தன்னுடைய அறையில் கையில் ஊசி குத்திய நிலையில் இறந்து கிடந்தார்.

சரவணனின் உடலின் வலது கையில் ‘இன்ட்ராவைன் கார்ட்’ எனும் நரம்பில் ஊசி போடுவதற்கான சாதனம் பொருத்தியபடி இருந்துள்ளது. அது மூடப் படாமல் அதன் வழியாக ரத்தம் வழிந்தபடி இருந்துள்ளது.

இந்த சாதனத்தை வலது கை பழக்கம் உள்ளவர்களால் இடது கையில் தாங்களே செலுத்திக் கொள்ள முடியும். ஆனால் சரவணனின் வலது கையில் இந்த சாதனம் இருந்துள்ளது. இதை வெளியில் இருந்து வந்தவரே செலுத்தியிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் வகையில் 2வது மாடியில் உள்ள சரவணனின் அறைக்கதவும் திறந்தபடி இருந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பிற்கான மருத்துவ கவுன்சிலிங் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. சரவணன் இறந்ததால் அவரது பொது மருத்துவ இடம் காலியானதாக அறிவிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சரவணனின் இடத்தை மற்றவர் பெறுவதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அங்கிருக்கும் மாணவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

முத்துகிருஷ்ணன் :

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு குறித்த ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்த சேலம் மாவட்டதை சேர்ந்த முத்து கிருஷ்ணன் 2017 மார்ச் 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

ரோஹித் வேமுலா மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய முத்துகிருஷ்ணன் முனைவர் பட்டபடிப்புகளுக்கான சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக தன்னுடைய பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.

அனிதா :

சிறு வயதிலேயே தாயை இழந்து மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. கழிவறை வசதி கூட இல்லாது இருக்கும் அந்த குடிசையிலிருந்து தான் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார்.

விடாப்பிடியாக படித்து தன்னுடைய கடின உழைப்பினால் பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். அவரது குடும்பம் மட்டுமல்ல அனிதா வசிக்கும் குழுமூர் கிராமமே அனிதா மருத்துவராக வருவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தான் நீட் பிரச்சனையால் மருத்துவ சீட் கிடைக்காது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

வறுமை சூழ்ந்தாலும் தங்களது கடின உழைப்பால் மேலே வர நினைக்கும் மாணவர்களை சிதைப்பது எந்த வகையில் நியாயம்? கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க ஆரம்பித்தாலும் பிற மாணவர்களாலும், கல்லூரி நிர்வாகத்தாலும் வருகின்ற நிர்பந்தங்களினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இப்போது கல்லூரிக்குள் நுழைவதையே கேள்விக் குறியாக்கிவிட்டது மத்திய அரசு. மேலே குறிப்பிட்ட எந்த மரணத்திற்கும் சரியான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை லட்சியமும் நிறைவேறாமல் தன் இறப்பிற்கு சரியான நீதியும் கிடைக்காமல் அமைதியாக உறங்குகிறார்கள் எங்களின் அறிவுச்சுடர்கள்!