சினிமா உலகில் சமீபகாலமாக அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை கேஸ்டின் கூச் (Casting COuch). வாய்ப்புத் தேடி வருபவர்களைத் தங்கள் சொந்த உபயோகத்துக்காகப் பயன்படுத்தும் நிகழ்வினை இந்த சொல் குறிக்கும். பாலிவுட், கோலிவுட் மட்டுமல்லாமல் உலக அளவில் ஹாலிவுட்டிலும் இந்த சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும் என்றும் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்தநிலையில், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்கள் குறித்து தைரியமாக போலீஸில் புகார் செய்யுங்கள் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட் அறிவுறுத்தியிருக்கிறார். பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், `இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனையளிக்கிறது. ஆனால், நடக்கவில்லை என்று நாம் மறுக்க முடியாது. ஒவ்வொருவரும், பல போராட்டங்களைக் கடந்தே சினிமாத் துறையில் கால் பதிக்கின்றனர். போராட்டங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன. அதுபோன்ற கடினமான சூழலைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடுகின்றனர்.

அதுபோன்ற சூழல்களை எதிர்கொள்பவர்கள், தங்களை முழுமையாக நம்ப வேண்டும். அந்த மோசமான சூழல்கள் கண்டு தளர்ச்சியடையாமல், அதுகுறித்து தங்கள் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி, தைரியமாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவு கட்ட முடியும்’ என்று ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Alia-Bhatt

மேலும், அதுபோன்ற சூழலைத்தான் எதிர்க்கொண்டதில்லை என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராஸி படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள ஆலியா,ஜோயா அக்தர் இயக்கும் கல்லி பாய் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், கலங்க் என்ற பெயரில் தயாராகி வரும் படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.