மும்பை: ஓய்வு பெறும் விஷயம், என்பது தோனி என்ற தனி மனிதனின் விருப்பம்.’ என இந்திய கிரிக்கெட் வீரர் விர்திமான் சகா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் ‘தல’ தோனி. இவர் ஐ.சி.சி., யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பைகளை (டி-20( 2007), ஒருநாள் (2011), சாம்பியன் டிராபி (2013)) வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

இவர், தன் மீது எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து கடந்த 2014 பாக்சிங் டே டெஸ்ட் உடன் ஓய்வு பெற்றார். பின் ஒருநாள், டி-20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் தற்போதும் தோனி மீது மோசமான பார்ம் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தோனியின் செயல்பாடு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சகா கூறுகையில்,’ எல்லா கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வு என்பது நிச்சயமாக இருக்கும். ஒரு வீரர் எப்படி செயல்படுகிறார் என்பதை சிலப்போட்டிகளை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாது. இதை நான் அவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் போது இருந்தே பார்த்தேன். ஓய்வு முடிவு என்பது ஒரு வீரரின் தனிப்பட்ட விஷயம். அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருப்பது, எரிச்சலைத்தான் ஏற்படுத்தும்.’ என்றார்.