Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிபுத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்கக் கூடாது.. காலா இசை வெளியீட்டு விழாவில் அதிரடித்த ரஜினி
புத்திசாலிகளிடம்தான் ஆலோசனை கேட்க வேண்டும். அதிபுத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்கக் கூடாது என்பதை கோச்சடையான் படம் எனக்குக் கற்றுக்கொடுத்தது என்று காலா பட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.
கபாலி படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக ரஜினி-ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. தனுஷ் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் காலா படக்குழுவினருடன், ரஜினி குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் இறுதியாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இது பாடல் வெளியீட்டு விழா போல இல்லாமல் படத்தின் வெற்றிவிழா மாதிரி உள்ளது. சிவாஜி படத்துக்கு வெற்றி விழா நடத்தினோம். அந்த விழாவில் கலைஞர் பேசிய விஷயங்களை மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒலித்த கலைஞரின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும். அந்த குரலை மீண்டும் கேட்க வேண்டும் என தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். அந்த குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
அதன்பிறகு எந்திரன் படத்தில் நடித்தேன். அந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட இருந்த நேரத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுபோன்ற சில காரணங்களால் அந்த படத்திற்கு வெற்றி விழா கொண்டாட முடியாமல் போனது. அடுத்து கோச்சடையான் படத்தில் நடித்தேன். அந்த படத்தின் மூலம் புத்திசாலிகளிடம்தான் ஆலோசனை கேட்க வேண்டும். அதி புத்திசாலிகளுடன் ஆலோசனை கேட்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்.
இமயமலைக்கு நான் போவதே கங்கையை பார்க்கத்தான். கங்கை நதி சில இடங்களில் மௌனமாகவும், ஒரு சில இடங்களில் ரெளத்திரமாகவும் நடமாடிக்கொண்டும் போகும். நதிகளை இணைப்பதே எனது கனவு. தென்னிந்திய அளவில் நதிகளை இணைத்து விட்டால், அதற்கு மறு கணமே நான் கண்ணை மூடினாலும் கவலை இல்லை. லிங்கா படத்தின் மூலம் நல்லவனாக இருந்தால் போதும். ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை கற்று கொண்டேன். என்னடா இந்த குதிரை 43 ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கிறதே என்று சிலருக்கு வயிற்றெரிச்சல் இருக்கிறது. நான் ஓட வில்லை நீங்கள் ஓட வைக்கிறீர்கள் ஆண்டவன் ஓட வைக்கிறான் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் என் ரூட் நான் போயிட்டே இருப்பேன்.
எனது 43 வருட சினிமா வாழ்க்கையில், பிளட் ஸ்டோன் ஆங்கிலப் படத்தைத் தவிர, ரஞ்சித் மட்டுமே படத்தின் முழு திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். காலா அரசியல் படம் அல்ல ஆனால் காலா படத்தில் அரசியல் இருக்கிறது. காலா படம் வெற்றி அடையும் என நம்புகிறேன். இந்த உலகம் மோசமானது. நம்ம குடும்பத்தை நாம்தான் பார்க்க வேண்டும். நெகடிவ் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்சியான நேர்மறையான சிந்தனைகளை வைத்து கொள்ளுங்கள்’’ என்று பேசினார்.
