Tamil Nadu | தமிழ் நாடு
எடப்பாடிகே திமுக உறுப்பினர் அட்டையை கொடுத்த ‘எல்லோரும் நம்முடன்’ செயலி! திமுகவை ஏற இறங்க பார்க்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி நடைமுறைப்படுத்தி உள்ளது. எல்லோரும் நம்முடன் என்ற ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, மொபைல் எண் கொடுத்து OTP மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக சேர்க்கலாம்.
இந்த செயலி வெளிவந்து முதல் மூன்று நாட்களிலேயே ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்தது. இதனை திமுக பெருமை என அறிவித்தது. இவ்வளவு எளிதில் திமுகவில் உறுப்பினராகலாம் என்பது வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது திமுக செயலி.
வெளிவந்த முதல் நாளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை திமுகவில் சேர்ந்ததாக அவருடைய உறுப்பினர் அட்டை வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. வெறும் மொபைல் எண்ணை வைத்து எந்தவித ஆவணமும் அடையாளமும் இன்றி உறுப்பினர் அட்டை வழங்குவது தவறு என்பதை இந்த முதல்நாள் சம்பவமே உணர்த்தியது.
இதனை அடுத்து வரிசையாக திமுகவில் நீக்கப்பட்டவரான மு.க அழகிரி திமுகவில் சேர்ந்ததாக உறுப்பினர் அட்டையை வழங்கியது அச்செயலி.
இதுபோன்ற தகவல்கள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவில் இணைந்தார் என்று அவருக்கும் ஒரு உறுப்பினர் அட்டையை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது திமுக.
திமுகவின் இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் உயிரோடு இல்லாதவர், அயல்நாட்டை சேர்ந்தவர், பிரபலங்கள், மாற்றுக் கட்சிகளை சேர்ந்தோர் என எவர் வேண்டுமானாலும் திமுக-வில் உறுப்பினர் அட்டையை பெற முடியும் என்ற மிகப்பெரிய குழப்பமான நிலையை திமுக ஏற்படுத்தியுள்ளது.
இப்படி அடுத்தடுத்த குளறுபடிகளால் சமூக வலைதளங்களில் திமுகவை எல்லா எதிர்கட்சி தரப்பினரும் நகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

dmk-card-admk
