பிரபல நடிகைகள் டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதாகுமாரி ஆகியோரின் அண்ணன் அருண்மொழி வர்மன். தி.நகரில் உள்ள பார்த்தசாரதிபுரத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் அப்ரினா, ஆயிரம் விளக்கு சீக்ரட்ஹார்ட் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி பள்ளிக்கு சென்ற அப்ரினா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. 5 நாட்கள் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து தி.நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து லலிதாகுமாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கண்ணீர்மல்க கூறியதாவது:அப்ரினா மிகவும் அமைதியான பொண்ணு. நன்றாக படிப்பாள், பேஸ்புக், வாட்ஸ் அப், வீடியோ கேம் எதுவும் அவளுக்கு கிடையாது. போன்கூட வீட்டில் இருந்தால் தான் பயன்படுத்துவாள். 6ந் தேதி பள்ளிக்கு சென்றவள், பள்ளி முடிந்ததும் டியூசனுக்கு செல்ல வேண்டும், ஆனால் அவள் அங்கு செல்லாததால் நாங்கள் எல்லா இடத்திலும் தேடினோம். போலீசிலும் புகார் கொடுத்தோம்.

அவள் நன்றாக படிக்க வேண்டும் என்று எல்லா அம்மாவும் போலத்தான் எங்கள் அண்ணியும் கண்டித்துள்ளார். ஆனால் அதற்காக அவள் கோபப்படுகிறவளோ, வருத்தப்படுகிறவளோ அல்ல. பிறகு எப்படி காணாமல் போனாள் என்ற தெரியவில்லை. பள்ளியில் 52 கேமராக்கள் இருக்கிறது.

எந்த கேமராவிலும் அவள் பதிவாகவில்லை. அவள் கடத்தப்பட்டிருப்பாள் என்று நாங்கள் நம்பவில்லை. எங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை. இதுவரை யாரும் பணம் கேட்டும் மிரட்டவில்லை.எப்படியும் அவள் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார். பேட்டியின் போது அண்ணி ஷெர்லியும் உடன் இருந்தார். அவரால் பேச முடியாமல் அழுதுகொண்டே இருந்தார்.