தமிழ் சினிமா முழுக்க முழுக்க ஹீரோக்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. ஹீரோக்கள் தான் இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோயின், காமெடியன் என எல்லாவற்றையுமே முடிவு செய்கிறார்கள். அப்படி ஒவ்வொரு ஹீரோவுக்கும் காத்திருக்கும் இயக்குனர்கள் பட்டியல்.

விஜய்:
விஜய் இப்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடிக்கிறார். அடுத்து யாரோடு இணைவார் என்பது அவருக்கு தான் வெளிச்சம். விஜய் கால்ஷீட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று காத்திருக்கிறார் அட்லீ. அட்லீக்கும் முன்பே விஜய்யிடம் கதை சொல்லி காத்திருப்பவர் எஸ்ஜே.சூர்யா. பார்த்திபனும் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வமும் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

அஜித்:
அஜித் இப்போது சிவா இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அஜித்தின் அடுத்த பட இயக்குநர்கள் பட்டியலில் முருகதாஸ், ஷங்கர் பெயர்கள் இருக்கின்றன. முருகதாஸ் வெகுகாலமாக காத்திருக்கிறார். ஷங்கருடன் இணைய அஜித்தே ஆர்வம் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

சூர்யா:
சூர்யா இப்போது எஸ் 3 யில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். சூர்யாவுக்காக காத்திருப்போர் பட்டியலில் கொம்பன் முத்தையாவோடு ராஜு முருகனும் இணைந்திருக்கிறார்.

கமல்ஹாசன்:
சபாஷ் நாயுடு கமலின் உடல்நலக் குறைவு காரணமாக தள்ளிப்போனதால் அடுத்த படமும் தள்ளிப்போகிறது. கமலை இயக்க தூங்காவனம் இயக்கிய எம்.ராஜேஷ், மவுலி, சிங்கீதம் சீனிவாசராவ் ஆகியோர் ஆல்ரெடி வெய்ட்டிங். பஞ்சதந்திரம் பார்ட் 2 பேச்சு அடிபடுவதால் வெய்ட்டிங் லிஸ்டில் கே.எஸ்.ரவிகுமாரும் இணைந்து கொள்கிறார்.

தனுஷ்:
வடசென்னை கால்வாசியும், என்னை நோக்கி பாயும் தோட்டா முக்கால்வாசியிலும் நிற்கின்றன. தனுஷோ, தான் இயக்கும் பவர் பாண்டி பட்த்தில் பிஸி. ஆக, வெற்றிமாறனும், கவுதம்மேனனும் காத்திருக்கின்றனர். அவர்களோடு கார்த்திக் சுப்புராஜ், மாரி 2 வுக்காக பாலாஜி மோகன், பாலிவுட் படத்துக்காக ஆனந்த் எல்.ராய் இதுதவிர ஒரு ஹாலிவுட் இயக்குநரும் காத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன்:
கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவான சிவாவுக்காக மோகன் ராஜா, பொன்ராம், இன்று நேற்று நாளை ரவிகுமார் ஆகியோர் வெய்ட்டிங். விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் இல்லை என்று சொன்னதால்தான் சூர்யா பக்கம் போயிருக்கிறார்.