fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும்: தங்கர்பச்சான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும்: தங்கர்பச்சான்

சினிமா டைரக்டர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து உலகத்துக்கு நாமெல்லாம் தமிழினம்தான் என்பதை உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை தான். அதேவேளையில் இந்தப் பண்டிகைக்கு ஆதாரமான, நமக்கெல்லாம் உணவளித்து இந்த உயிரையும் உடலையும் காப்பாற்றித் தருகின்ற மிச்சம் மீதி இருக்கின்ற உழவர்களும் நம்மைப் போலவே கொண்டாட வேண்டும் என்பதையும் நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் அடுக்கடுக்காக செத்து மடியும் உழவர்கள் பற்றிய செய்திகளை நாமும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறோம்.

விவசாயிகளின் உயிரும் போய் அவர்களுக்கு நேர்மையாக கிடைக்க வேண்டிய இழப்பீடுத் தொகையும் கிடைக்காத நிலையில் அந்த குடும்பங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை.

வேட்டி கட்டி காளையை அடக்க வேண்டியவர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு ஒன்றில்தான் தமிழர்களின் மானம் காப்பாற்றப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உயிர் ஒன்றுதான் விவசாயிகளிடம் இருக்கிறது, அதுவும் இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் போல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. கடமைக்கு தனித்தனியாக தங்களின் இருப்பை பதிவு செய்து, இந்த நிலையில் கூட ஓரணியில் திரண்டு, போராடி மத்திய அரசைப் பணிய வைக்காமல், அரசியல் கட்சிகள் கடமையை முடித்துக் கொள்கின்றன. பொதுமக்கள் எனும் பெயரில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு வராத வரையில் அது பாதிப்பே இல்லை என மக்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டோம். இந்நிலையில் பாவம் விவசாயி அவன் உயிரை காப்பாற்றிக் கொள்வானா? அவன் நிலையை உணர்த்தப் போராடுவானா?

இவ்வளவு காலம் எப்படியோ இருந்து விட்டோம் இப்போதாவது அவனது அழுகுரல் இந்த உலகத்துக்கு கேட்கட்டும். செத்து மடிந்த விவசாயிகளுக்காகவும், சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகவும் நாம் இந்த ஆண்டுப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடாமல் தவிர்க்கலாம். இது நடக்கிற காரியமா?

தமிழக அரசு விவசாயிகளுக்காக 15 சலுகைகளை அறிவித்திருக்கிறது. நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால் அதனால் எந்த அளவுக்கு அது விவசாயிகளை வாழ வைக்கும் என்பது புரியும். பருவமழை நம்மைக் கைவிட்டு விட்டது. கோடை மழை நமக்கு மழைத் தரும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. கால்நடைகளைக் காப்பாற்றும் வழியும் தெரியவில்லை. குடிநீருக்கும் காலைக்கடன் கழிப்பதற்கும் நாமெல்லாம் இவ்வாண்டில் அலையப் போகிறோம் என்பதை போகப்போக அனுபவிக்கலாம்.

அனைத்தையும் கண்டும் காணாததுபோல் இருக்கும் மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும். அறிவித்தால் பலன் பெறப் போவது செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் மட்டுமல்ல, அடிப்படைத் தேவைக்கே தண்ணீரில்லாமல் தவிக்கப் போகும் நாமும் தான்.

விவசாயிகளுக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, படமெடுத்து வலைத்தளங்களில் பகிர்வதற்குப் பதிலாக இந்தச் செய்தியைப் பரப்பி நாம் தமிழர்கள் தான் என்பதை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் கோவை வந்த தங்கர்பச்சான் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், மத்திய அரசு அமைக்கவில்லை. இந்தியாவில்தான் தமிழகமும், கர்நாடகாவும் உள்ளது என்பதை மறந்து விட்டனர். இதனால் தான் தமிழ்நாட்டில் தற்போது விவசாயிகள் சாகும் நிலை உள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. ஆகவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழர்களின் ஒரே பண்டிகை பொங்கல். சாதி, மத வேறுபாடு இல்லாமல் கொண்டாடப்படுகிறது. நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த விவசாயிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்த பொங்கல் பண்டிகையன்று வீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top