கன்னட நடிகர் துனியா விஜய் கதாநாயகனாக நடிக்கும் கன்னடப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 7-ந்தேதி பெங்களூர் அருகில் திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடந்தது. அப்போது நடிகர் துனியா விஜயுடன் ஸ்டண்ட் நடிகர்கள் அனில் குமார், உதய் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

உயரத்தில் இருந்து ஏரித்தண்ணீரில் குதித்த போது 3 பேரும் நீரில் மூழ்கினர். நடிகர் துனியா விஜய் தண்ணீரில் தத்தளித்த போது அவரை அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி விட்டனர். ஆனால் ஸ்டண்ட் நடிகர்கள் இருவரும் அதிக ஆழத்துக்குள் சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தனர். 3 நாட்களுக்கு பின்பு அவர்களது உடல்கள் ஏரியில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் கன்னட திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2 பேர் பலியானது தொடர்பாக தயாரிப்பாளர் சுந்தர் பி.கவுடா, டைரக்டர் நாக சேகர், ஸ்டண்ட் மாஸ்டர் ரவிவர்மா, உதவி டைரக்டர் சித்து ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல ஆபத்தான வகையில் படப்பிடிப்பு நடத்தி உயிர்ப்பலி ஏற்பட காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் ஏற்கனவே தயாரிப்பாளர் சுந்தர் பி.கவுடா கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று டைரக்டர் நாக சேகர், உதவி டைரக்டர் சித்து, ஸ்டண்ட் மாஸ்டர் ரவி வர்மா ஆகிய 3 பேர் மாகடி சர்க்கிள் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

யூனிட் மேலாளர் பரத் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.