Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் சிவாவின் முதல் படம் இது தான் தெரியுமா?
தல அஜித்துடன் வீரம், வேதாளம் மற்றும் விவேகம் படத்துக்குப் பின்னர் நான்காவது முறையாகக் கைகோர்த்திருக்கிறார் `சிறுத்தை’ சிவா. விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்துடன் படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், போஸ் வெங்கட் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தைத் திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நடிகர் அஜித், இயக்குநர் சிவாவுடன் 4-வது முறையாகக் கைகோர்த்திருப்பது அவருடைய ரசிகர்கள் ஒருதரப்பினர் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்றே கூறலாம். வீரம், வேதாளம் என முதல் இரண்டு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், விவேகம் மூலம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், இயக்குநர் சிவாவுக்கு நான்காவது முறையாக அஜித் வாய்ப்புக் கொடுத்தது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. விவேகம் படத்தில் இழந்ததை, விஸ்வாசம் படம் மூலம் மீட்டெடுக்க சிவா, கடுமையாக உழைத்து வருகிறார். தீவிர சாய்பாபா பக்தரான சிவா, திரைக்கதையை உருவாக்குவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறாராம்.
கோலிவுட்டில் சிறுத்தை சிவா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டும் சிவாவின் முதல் படம் சிறுத்தை இல்லை என்பதே உண்மை. கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த சிறுத்தை படம் சிவாவுக்குத் தமிழில் முதல் படம் அவ்வளவே. அதற்கு முன்பாகவே தெலுங்கில் அவர் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். கோபிசந்த் மற்றும் அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான சூர்யம் படமே, இயக்குநராக சிவாவுக்கு முதல் படம். அது தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதையடுத்து ஷங்கம் என்ற படத்தையும் சிவா தெலுங்கில் இயக்கினார். அவர் பிரபலமான ஒளிப்பதிவாளரும் கூட. தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த நாகர்ஜூனாவின் பாஸ் படம் மற்றும் தமிழில் பிரபு மற்றும் பிரபுதேவா ஆகியோர் நடித்திருந்த சார்லி சாப்ளின் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் சாட்ஷாத் நம்ம சிவாவே தான். அவரது விஸ்வாசம் படம் மிகப்பெரிய வெற்றியடைய அஜித் ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.
