விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பைரவா படம் வெளியாகும் இன்றைய தினத்தில், இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் அவர் இயக்கியுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக வெளியிட்டுள்ள விளம்பரம் விஜய் ரசிகர்களின் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் இன்றைய விளம்பரத்தில் “ஒரு பை – ரவாவில் 100 பேருக்கு கேசரி கிண்டலாம் – அதில் ரவையூண்டு சிதறினாலே கோடி எறும்பு உண்ணலாம்” என பைரவா படத்தைக் தன் ஸ்டைலில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே,பைரவா படத்திற்கு இந்தத் தலைப்பை அறிவித்த போது அஜித் ரசிகர்கள் பை ரவா (buy rava) என்ற அர்த்தத்தில் கிண்டலடித்தனர். இப்போது தமிழ்த் திரையுலகத்தில் மதிப்பு மிக்க இயக்குனராக கருதப்படும் பார்த்திபன் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை கடந்த மாதமே அவர் வெளியிட திட்டமிட்டிருந்தார். தன்னுடைய குருவுக்கு நன்றி செலுத்துவதாகச் சொல்லி பாக்யராஜின் மகன் சாந்தனுவை நாயகனாக நடிக்க வைத்தார். படத்திற்கு அவர் எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால், பைரவா படத்துடன் இருந்தால் எப்படியும் தன் பையை நிரப்பிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் பொங்கலுக்கு படத்தை வெளியிடுகிறார் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

பைரவா படம் வெளிவரும் தினத்தன்று திரையுலகத்தில் உள்ள ஒரு முக்கிய இயக்குனரே இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிடுவது சரியா?