‘காதலும் கடந்து போகும்’ ஸ்பெஷல் என்னவென்றால் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும் என்று இயக்குநர் நலன் குமரசாமி தெரிவித்தார்.

விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் நலன் குமரசாமி, “‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த காமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிகாட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் காமெடி இருந்து கொண்டே இருக்கும்.

எனது முதல் படமான ‘சூது கவ்வும்’ படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து பண்ணியிருக்கிறேன். அப்படத்தின் சாயல் இப்படத்தில் நீங்கள் காணவே முடியாது. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி படத்தை தட்டி தூக்கிய பிரபல தயாரிப்பாளர்...

‘சத்யா’ படத்தில் நடித்த சுந்தர் இப்டத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ‘ப்ரேமம்’ படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனாவை நாயகியாக இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை “என்னய்யா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறா” என்று விஜய் சேதுபதி பாராட்டினார். போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தின் 70% முதல் 80% காட்சிகள் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டே இருக்கும்.

நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே. தமிழ் சினிமாவில் உடனே நட்பு உருவாகி விடுவது போல பண்ணியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் படிப்படியாக பண்ணியிருக்கிறோம். அதில் காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன். அக்காட்சிகள் மூலமாக நட்பு உருவானது என்பதை பார்ப்பவர்கள் நம்புவது போல சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி எல்லாம் கிடையாது.

அதிகம் படித்தவை:  தன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தானே கலாய்த்த சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனர். செம்ம சார் நீங்க ?

‘சூது கவ்வும்’ நயன்தாரா கோயில் கட்டும் காமெடி காட்சிகள் எல்லாம் படம் வந்தவுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல இப்படத்தின் காமெடி காட்சிகளுக்கும் கிடைக்கும் என நம்புகிறேன். இப்படம் ஒரு கொரியன் திரைப்படத்தின் ரீமேக்காகும். அப்படத்தை அப்படியே எடுத்திருக்கிறேன், ஆனால் அதில் என்னோட பாணி இருக்கும்.

‘காதலும் கடந்து போகும்’ படத்தின் கதை ஒன்றரை வருடத்திற்கு முன்பே தயார் தான். நானும் விஜய் சேதுபதியும் தயாராக தான் இருந்தோம். ஆனால், வேறு ஒரு கதை பண்ணலாம் என்று தான் வேறு ஒரு கதை பண்ணினோம். அதை சரியாக வரவில்லை என்றவுடன் ஒரம் வைத்துவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி அதே படத்தை பண்ணினோம்.

இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.