பாலா இயக்கத்தில் உருவாகிவுள்ள புதிய படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பாலா. இதில் யுவன் மற்றும் புதுமுகம் பிரகதி நடிக்கவிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் ‘சி 3’ படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டி ஒன்றில் “எப்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிப்பீர்கள்” என்ற கேள்விக்கு “பேசினோம். ஆனால், முதலில் ஜோதிகா நடிப்பில் ஒரு படம் இயக்கிவிட்டு தான் உன்னை வைத்து படம் இயக்குவேன்” என்று பாலா தெரிவித்ததாக சூர்யா தெரிவித்திருந்தார்.

தற்போது இக்கூட்டணி உறுதியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யாவின் ‘2டி நிறுவனம்’ தயாரிக்கவுள்ளது.

முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இக்கதையில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும், அவரோடு நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.