ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 30-ம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளது.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

சுமார் 350 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மெருகேற்றும் விதமாக, அப்பணிகளுக்கு மேலும் 50 கோடியை ஒதுக்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் படத்தின் பொருட்செலவு சுமார் 400 கோடிக்கு ஆகியிருக்கிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 30-ம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளார்கள். இதில் ரஜினி சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. மார்ச் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 14-ம் தேதி ‘2.0’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.