அண்மைக் காலங்களில் பெண்கள் மீதான அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மீதான வன்முறைகள் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளனவா அல்லது ஊடக வளர்ச்சியின் காரணமாக தற்போது அத்தகைய கொடுமைகள் வெளிவருவதால் அத்தகைய எண்ணம் தோன்றுகிறதா என்ற கேள்வி எழுந்தாலும் பெண்கள் மீதான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது என்பதில் சமரசம் செய்துகொள்வதற்கு இடமில்லை.

பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் மனித உருவில் இருக்கும் மனிதத்தன்மையற்ற ஒருவன், திண்டுக்கல்லில் அரங்கேற்றியுள்ள அசிங்கம்தான் இந்த நிகழ்வு….

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு கால டிப்ளமோ, 4 ஆண்டு கால பட்டப்படிப்பு ஆகியவை கற்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த நர்சிங் பயிற்சி பள்ளியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள சுமார் 400 மாணவிகள் விடுதியில் தங்கி நர்சிங் பயிற்சி பெற்று வருகின்றனர். நர்சிங் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆரோன் சுந்தர் என்பவர் மாணவிகளை ஆபாசமாக படமெடுத்து அதை வைத்து மிரட்டி அந்த பெண்களை அனுபவித்து வந்தது அம்பலமாகியுள்ளது.

ஆரோன் சுந்தர் என்ற அந்த ஆசிரியர், டியூசன் எடுப்பதாக தன்னை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மயக்க நிலையில் அந்த மாணவியை ஆபாசமாக படமெடுத்த அந்த கொடூரன், அவன் அழைக்கும் போதெல்லாம் அவனது ஆசைக்கு இணங்குமாறும் அதற்கு மறுத்தால் அந்த மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான்.
இதையும் அந்த மாணவி அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாணவியைத் தொடர்ந்து திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவரும் ஆரோன் சுந்தர் மீது இதே புகாரை அளித்துள்ளார். தான் மட்டுமல்லாது தன்னைப் போல 20 பெண்களை ஆரோன், பாலியல் வன்கொடுமை செய்ததோடு மயக்க நிலையில் ஆபாச படமெடுத்து மிரட்டியதாகவும் திண்டுக்கல் மாணவி புகார் அளித்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து ஆரோன் சுந்தர் தலைமறைவாகிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசிரியரான ஆரோன், மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காகவே அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார் எனவும் போலீசாரின் விசாரணைக்குப் பிறகே மாணவிகளின் மீதான ஆரோனின் பாலியல் வன்கொடுமைகள் தங்களுக்கு தெரியவந்ததாகவும் ஆரோனின் வீட்டிற்கு அருகே வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரோன் மீது 2 மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகளும் இனிமேல் புகார் அளிக்க முன்வரலாம் எனவும் அதன்பிறகே எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும் எனவும் நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.

மானத்திற்கு பயந்து இதுவரை புகார் அளிக்காமல் இருக்கும் ஆரோனால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகளும் இனிமேல் புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவான ஆரோனை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அனுப்பி வைக்கின்றனர். தங்களது பிள்ளைகளைப் போல பார்த்துக்கொள்வார்கள் என்ற ஆசிரியர்களின் மீதான நம்பிக்கையில் பெண் பிள்ளைகளை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கு தற்போதைய சூழலில் வருத்தம்தான் மிஞ்சுகிறது.

பெண்களுக்கு கல்வி எதற்கு? என்ற நிலை மாறி கல்வியறிவு பெற்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்ற நிலை உருவாகியுள்ள தற்போதைய சூழலிலும் பெண்கள் மீது அரங்கேற்றப்படும் பாலியல் வன்கொடுமைகள் வெட்கத்துக்குரியது.

எத்தகைய உயர் பதவியில் இருக்கும் பெண்களைக்கூட என்னதான் இருந்தாலும் பெண் தானே என்ற சில ஆண்களின் பார்வை இன்றும் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை இத்தகைய கொடூரன்களின் காம வேட்கைக்கு இரையாகி வருகின்றனர்.

பெண்களை உடலாக மட்டுமே பாவித்து அவர்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அத்தகைய கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பெண்ணியத்தைப் போற்றுபவர்களின் அவா.