Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெட் கனெக்ஷன் இல்லாம டிஜிட்டல் இந்தியா எப்படி சாத்தியம்? கேள்வியெழுப்பும் 3 மாவட்ட மக்கள்
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த தேசிய ஊடகங்களிலும் தூத்துக்குடி, ஸ்டெர்லைட் என இரண்டு வார்த்தைகள் மாறிமாறி வேறு வேறு வகையில் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என யார் ஆணையிட்டது என்ற கேள்வியை ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
தூத்துக்குடி ஆட்சியர் செய்தியாளரைச் சந்தித்தபோது அவருடன் இருந்த தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவிடம் இந்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால், அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி தமிழக அரசு நியமித்துள்ள கண்காணிப்புக் குழு மழுப்பலாகப் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டது. ஆனால், பெரும்பான்மை மக்கள் முதல் ஊடகங்கள் வரை எழுப்பும் இந்த கேள்விக்கு நிச்சயம் ஒருநாள் அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று கங்கணம் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
இந்தச் சூழலில்தான் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதால், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு. பொதுவாக ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நாட்டுக்கு எதிராக பிரிவினைவாதிகள் ஒன்று கூடி விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளில் அவ்வப்போது இணைய சேவையைத் துண்டிப்பது அரசுகளின் வழக்கம்.
அதேநிலை இன்று அமைதிப் பூங்கா என வர்ணிக்கப்படும் தமிழகத்துக்கு வந்திருக்கிறது. எல்லையோர மாவட்டங்களைப் போலவா தென் மாவட்ட மக்களின் செயல்பாடுகள் இருக்கின்றன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதேபோல், டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மக்களை இணையத்துக்குள் கொண்டு வந்துவிட்டு, அரசே இணையத்தில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள் அந்த 3 மாவட்ட மக்கள்.
இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் இணையத்தின் உதவியில்லாமல் பெரும்பாலான வேலைகளை முடிக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. வங்கிகளின் பணபரிமாற்றம், ஏடிஎம் இயந்திரங்கள், அரசு வழங்கும் ஆதார் சேவைகள், பாஸ்போர்ட், பத்திரப்பதிவுகள் என அடிப்படைத் தேவைகள் பெரும்பாலாவற்றிருக்கும் மக்கள் இணையத்தைச் சார்ந்திருக்கும் நிலைதான் இன்று இருக்கிறது. இணைய சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதால், மக்கள் திறந்தவெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டதைப் போல் உணர்கிறார்கள்.
தூத்துக்குடி நகருக்குட்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய எல்லா தெருக்களுமே வெறிச்சோடியே கிடக்கின்றன. மக்கள் வீடுகளுக்குள் முடக்கியுள்ளனர்.
மற்றொருபுறம் கல்வி சார்ந்த பெரும்பான்மையான பணிகள் இந்த மாவட்டங்களில் முடங்கியுள்ளன. பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் நடப்பதாக இருந்த தேர்வுகள் ஜூன் 5 முதல் 7ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு (ரீ-வேல்யூஷன்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அந்த மாவட்டங்களில் இயல்புநிலைக்குத் திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 தினங்களுக்குள் அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இணைய வசதி துண்டிக்கப்பட்டதால், மேற்கூறிய மாவட்டங்களைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் 80 கி.மீ தூரம் பயணித்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கின்றனர். அதேநேரம் நெல்லை, தூத்துக்குடி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்ட கி.மீ தூரம் பயணித்து விருதுநகர் மாவட்ட எல்லைக்குள் சென்று ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்று கூறி மக்களை இணைய உலகிற்குள் தள்ளிய அரசுகளே, இணைய வசதியைத் துண்டிப்பது என்ன டிசைனோ என்று கமெண்ட் அடிக்கிறார்கள் அந்த மக்கள்.
