சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் மற்றும் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா சென்றுள்ளது படக்குழு. கடந்த சில நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். விவேகம் படத்தை முதலில் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதன் பிறகு, ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது. அஜித்தின் முந்தைய படமான வேதாளம் திரைப்படம் தமிழகத்தில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் காரணமாக, விவேகம் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் ஆரம்பகட்ட விலையே 50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் யார் அதிக தொகைக்கு வாங்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு படத்தை விற்க உள்ளனர். இதற்கிடையில் விவேகம் படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் ஜாஸ் சினிமாஸ் வாங்கிவிட்டதாக ஒரு தகவல் அடிபடுகிறது.