2016ம் ஆண்டின் கடைசியில் வெளிவந்த “துருவங்கள் 16” படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமான படமாக அமைந்தது. 21 வயதே ஆன கார்த்திக் நரேன் இயக்கிய இந்தப் படம் கடந்த வாரம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அங்கு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படத்தின் வசூல் அதிகரித்து வெற்றியை நோக்கிப் பயணிப்பதாகச் சொல்கிறார்கள்.

இன்று இப்படத்தின் 75வது நாள் சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல் ராஜா, சி.வி.குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கார்த்திக் நரேனின் அடுத்த படமான “நரகாசுரன்” படத்தை கௌதம் மேனன் இணைந்து தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“துருவங்கள் 16” படம் பற்றிய வரவேற்பும், வெற்றியும் பாலிவுட் வரை சென்றடைந்துள்ளது. சீனியர் நடிகர் ஒருவர் படம் பற்றி கேள்விப்பட்டு அதை ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறாராம். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியகலாம் என்கிறார்கள். ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்தால் ரகுமான் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனைத் தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடிக்க முடியாது என்பதே உண்மை.

படம் வெளியான போதே தெலுங்கு, ஹிந்தி ரீமேக் என்று பேசப்பட்டது. ஆனால், தெலுங்கில் ரீமேக் செய்யாமல் டப்பிங் செய்தே வெளியிட்டுள்ளார்கள். ஹிந்தியிலாவது ரீமேக் ஆகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.