மும்பை அணிக்கு எதிராக டோணி களமிறங்கியபோது, புனே இரு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது மொத்த மைதானமும் டோணி.. டோணி.. என கோஷமிட்டது. ஆனால் பந்துகளுக்கும், ரன்களுக்குமான இடைவெளி கூடிக்கொண்டே வந்ததால் கிரீசில் நின்ற டோணி மற்றும் கேப்டன் ஸ்மித்துக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.

பதற்றம் ஒருபக்கம், பெரிய மைதானம் என்பது மறுபக்கம் என்பதால் பவுண்டரிகளும், சிக்சர்களும் அதிகம் பறக்கவில்லை. ஓடியேதான் ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது புனே.

க்ருணால் பாண்ட்யாவின் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார் டோணி. அதே ஓவரில் ஸ்மித் சிக்ஸ் அடிக்க போட்டி களைகட்டியது. ஆனால் அடுத்த ஓவரிலேயே பும்ரா பந்தில் கீப்பர் பார்திவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டோணி. அவர் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டோணி அவுட்டாகும்போது புனே அணி ஸ்கோர் 98 ரன்களாக இருந்தது.

போட்டியை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பினிஷர் டோணி 10 ரன்களில் வெளியேறியது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.