இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஒரு ‘டுவென்டி-20’ போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்தது.
மழை காரணமாக ஆடுகளம் ஈரமாக இருந்ததால், போட்டி 40 நிமிடம் தாமதமாக துவங்கியது. தனது 50வது ‘டுவென்டி-20’ போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ‘டாஸ்’ வென்று, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு டிக்வெல்லா, தரங்கா (5) ஜோடி சுமரான துவக்கம் தந்தது. டிக்வெல்லா (17), பும்ரா ‘வேகத்தில்’ போல்டாக, மாத்யூஸ் (7), தோனியின் ‘மின்னல்’ வேக ‘ஸ்டம்பிங்கில்’ திரும்பினார். சகால் ஓவரில் இரு சிக்சர், ஒரு பவுண்டரி என, 17 ரன் எடுத்த முனவீரா, 26 வது பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 53 ரன்கள் எடுத்து, குல்தீப் ‘சுழலில்’ போல்டானார். பெரேரா, பிரசன்னா தலா 11 ரன் எடுத்தனர். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. பிரியஞ்சன் (40), ஷனகா (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சகால் 3, குல்தீப் 2, பும்ரா, புவனேஷ்வர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (9), ‘ஷாக்’ கொடுத்தார். ராகுல் (24) நீடிக்கவில்லை. அடுத்து கோஹ்லி, மணிஷ் பாண்டே சேர்ந்து ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்தனர். பின் அப்படியே மெல்ல மெல்ல விளாசத் துவங்கினர்.
பிரசன்னா பந்தை சிக்சருக்கு விரட்டிய கோஹ்லி, பெரேரா ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். தொடர்ந்து மாத்யூஸ் வீசிய போட்டியின் 12வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என, இருவரும் சேர்ந்து 17 ரன்கள் எடுக்க, இந்திய அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது.
சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி, 30 வது பந்தில் அரைசதம் அடித்தார். சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில் இவர் அடித்த 17வது அரைசதம் இது. இவருக்கு மணிஷ் பாண்டே ‘சூப்பர் கம்பெனி’ கொடுக்க, இந்திய அணி வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது. 3வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த போது, 82 ரன்கள் எடுத்த கோஹ்லி அவுட்டானார்.
கடைசியில் மணிஷ் பாண்டே ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 19.2 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது. மணிஷ் பாண்டே (51), தோனி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி இம்முறை இலங்கை மண்ணில் டெஸ்ட் (3-0), ஒருநாள் (5-0) மற்றும் ‘டுவென்டி-20’ (1-0) என, மூன்று வித தொடர்களையும் முழுமையாக (9-0) கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து, அன்னிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட், ஒருநாள் மற்றும் ‘டுவென்டி-20’ என, மூன்று வித தொடர்களையும், முழுமையாக கைப்பற்றிய முதல் அணி என, வரலாறு படைத்தது இந்தியா. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி (2010), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் (3-0), ஒருநாள் (5-0) மற்றும் ‘டுவென்டி-20’ (1-0) தொடரை 9-0 என, தனது சொந்தமண்ணில் வென்றிருந்தது.

‘நாட் அவுட் ‘ நாயகன்
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் தோனி களமிறங்கும் முன் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த நான்கு போட்டியில் தோனி, 45, 67, 49, 1 ரன் மற்றும் ‘டுவென்டி-20’ போட்டியில் 1 ரன் என எடுத்த தோனி, இந்த ஐந்து போட்டிகளிலும் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.