புதுடில்லி: இந்து கடவுளை அவமதித்தது தொடர்பான தோனி மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.  இந்திய ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ அணி கேப்டன் தோனி, 35. கடந்த 2013ல் வெளியான ஆங்கில பத்திரிகை அட்டைப்படத்தில் தோனி, விஷ்ணு போல சித்தரிக்கப்பட்டு இருந்தார். இவரது கைகளில் ‘ஷூ’ உள்ளிட்ட பல்வேறு விளம்பர பொருட்கள் இருந்தது பெரும் சர்ச்சை கிளப்பியது. இதை எதிர்த்து சமூகநல ஆர்வலர் ஜெயகுமார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல ஆந்திராவிலும் வழக்கு நடந்தது.  இதில் தோனி நேரில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.

 

ஆந்திராவில் தொடர்ந்த வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத ‘பிடிவாரண்ட்’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தோனி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று, நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ‘பென்ச்’ முன்பு விசாரணைக்கு வந்தது. இதில்,‘தோனி மீதான வழக்கில் சட்டத்தின் விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இதனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது,’ என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.