தங்கமகன் படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் மிரட்டு படத்தில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். மிரட்டு படப்பிடிப்பு முடிந்ததும், தற்போது ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி வரும் கொடி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி என இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஷாம்லியின் கால்ஷீட்டில் நிறைய குளறுபடி இருந்ததினால் அவரை நீக்கச் சொல்லிவிட்டாராம் தனுஷ். அவருக்குப் பதில், தற்போது பிரேமம் மடோனா செபாஸ்டியன் இன்னொரு நாயகியாக நடிக்க இருக்கிறார்.

கொடி படத்தை முடித்த கையோடு வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தின் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லி வந்தார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்கும் என்றும் சொன்னார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆன்ட்ரியா ஆகியோர் நடிப்பதாகவும், இது இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் புதிய தகவலாக.. வட சென்னை படத்தை மீண்டும் ஒத்தி வைத்துவிட்டதாக திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள். அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புப்கொண்டிருக்கிறார். என்மேல் பாயும் தோட்டா என்று பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறதாம். அதாவது வட சென்னை துவங்க வேண்டிய நேரத்தில்.