பிரபல இயக்குனர் கவுதம் மேனன் ஒரு படத்தை முடிக்க குறைந்தது ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ எடுத்து கொள்ளும் வழக்கம் உடையவர். அவருடைய ‘வேட்டையாடு விளையாடு’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்கள் அதிக நாட்கள் படமாக்கப்பட்டது. ஏராளமான பணிகள் அந்த படத்தில் இருந்ததால் காலதாமதம் ஆனதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அவரிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் இயக்கிய தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை அவர் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்து தற்போது முடிக்கும் நிலையில் உள்ளார். இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இருப்பதால் இந்த படத்தை அவர் கிட்டத்தட்ட ஐந்தே மாதங்களில் முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கதை வேறு. கடந்த 2013ஆம் ஆண்டே இந்த படத்தை ஆரம்பித்த கவுதம் மேனன், பின்னர் திடீரென அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்க சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த படத்தை தொடங்கிய கவுதம் மேனன் இன்னும் தள்ளிப்போகாதே என்ற பாடலின் படப்பிடிப்பை பெண்டிங் வைத்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்த படத்திற்காக அவர் எடுத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.