‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன என்று படக்குழுவில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. ஒன்றாக எண்டர்டையின்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யார் இசையமைப்பாளர், இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தை படக்குழு அதிகார்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற பாடலை மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை விட்டுவிட்டு, ‘துருவ நட்சத்திரம்’ முதற்கட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார் கவுதம் மேனன். அப்படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் நிலைதான் என்ன என படக்குழுவில் பணியாற்றிய ஒருவரிடம் விசாரித்த போது, “தனுஷுக்கு சம்பளத்தில் பெரும் பகுதியை கவுதம் மேனன் இன்னும் கொடுக்கவில்லை. ஆகையால், அவர் சம்பளம் கொடுங்கள் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியாகி அப்படத்தின் மூலம் வரும் பணத்தில் தனுஷுக்கு சம்பளம் அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும், படம் எப்போது வெளியாகும் உள்ளிட்ட எந்த ஒரு கேள்விக்குமே தற்போது விடையில்லை” என்று கவலையுடன் தெரிவித்தார்.

இப்படத்துக்கு தர்புகா சிவா தான் இசையமைப்பாளர் என்றும் தெரிவித்தார். ஆனால், படக்குழு இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை.