30 வயதுக்குள் சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்கள் பட்டியலை பிரபல நாளிதழ் ஒன்று தயாரித்து வெளியிட்டது. அதில், இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், கவுதம் மேனன், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ‘துருவங்கள் பதினாறு’ இயக்குனர் கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குனர்களை பட்டியலிட்டது.

இந்த பட்டியலை படித்து பார்த்த நடிகர் தனுஷ், அதில் தனது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் பெயர் இடம்பெறாதது குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, அந்த நாளிதழில் வந்த பட்டியலில் செல்வராகவன் பெயர் இடம்பெறாதது வருத்தத்தையும், வலியையும் கொடுக்கிறது. இந்த பட்டியலை தயாரித்தவர்கள் சரியாக ஆராயாமல் செய்ததுபோலவே தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் தனது 28-வது வயதிலேயே ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். அதற்கு முன்னதாக இவர் வசனம் எழுதிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தில்தான் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.