பி அண் சி யில் பிசினஸ் பிய்ச்சுக்கணும்னா, ஒரே வழி அடி உதைதான்! இந்த பார்முலாவுக்கு மயங்காத ஹீரோக்களே இல்லை. இப்படி தடி தடியான அடியாட்களை வலக்கையை உலக்கை போலாக்கிக் கொண்டு தாக்குகிற ஹீரோக்களுக்குதான் ஓஹோ என்று கூடுகிறது ரசிகர்கள் கூட்டமும்! ஆனால் இப்படி சுமார் பலமுள்ள ஹீரோக்களையும் சூப்பர் பாய்களாக்கும் ஸ்டன்ட் மேன்களுக்கு கிடைப்பதென்ன? சொற்ப சம்பளமும், தட்டில் விழும் ஒன்றிரண்டு எக்ஸ்ட்ரா சிக்கன் பீஸ்களும்தான்.

இந்த உண்மையையும் வருத்தத்தையும் இப்போதுதான் புரிந்து கொண்டார்களோ என்னவோ? தனுஷும், அவரது காதல் மனைவி ஐஸ்வர்யாவும் இத்தகைய ஸ்டன்ட் மேன்கள் மீது பரிந்து பரிந்து கரிசனம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் தனுஷ், அவரே இயக்கி வரும் ‘பவர் பாண்டி’ படத்தில் இளம் வயது ஸ்டன்ட் மேனாக நடித்து வருகிறார். படங்களில் ஸ்டன்ட் போடுகிற இவர்களின் வாழ்வில் நடக்கும் காதல், மோதல், அதிரடி திருப்பங்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கதையில், முடிந்தவரை அவர்களின் கஷ்டத்தையும் சொல்லியிருக்கிறாராம் தனுஷ்.

ஐஸ்வர்யா இயக்கி வரும் இன்னொரு படம் முழுக்க முழுக்க சினிமா ஸ்டன்ட் ஆட்களை பற்றிய கதைதான் என்பது ஏற்கனவே அரசல் புரசலாக அறிந்ததுதான். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, “ஸ்டன்ட் மேன்களுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்ததுதான் உங்களுக்கு தெரியுமே?

“ஸ்டன்ட்மேன்களாகிய எங்க மீது இவங்க ரெண்டு பேரும் ஏன் திடீர் பாசம் காட்றாங்க?” இப்போது கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் பெரிய டவுட்டே இதுதான்.