சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படமான பாட்ஷா டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு, 5.1 ஒலித் துல்லியத்துடன் மீண்டும் வெளியாகவிருக்கிறது.

சத்யா மூவீஸ் நிறுவனம் தயாரித்த பாட்ஷா படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். தேவா இசையமைப்பில் 1995ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அன்றைய பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிக்கு இமாலய வெற்றியைத் தேடித் தந்த படம் அது.

சத்யா மூவிஸ், தங்களுடைய நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மீண்டும் இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்து, இந்த டிஜிட்டல் ‘பாட்ஷா’வுக்காக, புதிதாக பின்னணி இசையை அமைத்து சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தேவா.

தற்போது ‘பாட்ஷா’ படத்தை மெருக்கூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.

இப்போதைய மாடர்ன் இசைக் கருவிகளை வைத்து புதிதாக இசையை உருவாக்கி சேர்த்துள்ளாராம் இசையமைப்பாளர் தேவா. ஜனவரி மாதம் உலகெங்கும் 13-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது பாட்ஷா.