ஒருவழியாக தீபாவளி ரீலீஸ் படங்கள் என்னென்ன என்பது முடிவாகிவிட்டது. மொத்தம் நான்கு படங்கள். அவற்றில் காஷ்மோரா, கொடி என இரு பெரிய படங்கள்.

திரைக்கு வராத கதை, கடலை என இரு சிறிய (பட்ஜெட்) படங்கள். நான்கு படங்களில் அதிக எதிர்பார்ப்பு, காஷ்மோரா படத்துக்கு உருவாகியுள்ளது. கொடி குழுவினரோடு தமிழகம் முழுக்க தனுஷ் சுற்றுப் பயணம் தொடங்கியிருப்பதால் கொடிக்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்து வருகிறது.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள காஷ்மோராவை கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை – சந்தோஷ் நாராயணன். போஸ்டர்களைப் பார்த்தால் வரலாற்றுப் படம் மாதிரி தெரிந்தாலும், வரலாறு, த்ரில்லர், கற்பனை கலந்த ஒரு படம் காஷ்மோரா.

இதில் கார்த்திக்கு இரட்டை வேடங்கள். அதில் ஒரு பாத்திரத்தின் பெயர்தான் காஷ்மோரா என்கிறார்கள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ புகழ் கோகுல். இளவரசி வேடத்தில் நயன்தாரா. பில்லி சூனியம், ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவியாக ஸ்ரீவித்யா. காஷ்மோரா, கார்த்திக்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடி

கொடி ஒரு அரசியல் படம். தனுஷுக்கு இரட்டை வேடம். தனுஷும் – த்ரிஷாவும் முதல் முறை ஜோடி சேர்ந்துள்ளனர். எதிர்நீச்சல், காக்கிச் சட்டை தந்த துரை செந்தில் குமரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜெயித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ்!

இந்த தீபாவளி ரேசில் இந்த இரு படங்களில் எது ஜெயிக்கும்? இரண்டுமே ஜெயிக்குமா? என ஆவலோடு காத்திருக்கிறது கோடம்பாக்கம். அதைத் தீர்மானிக்கும் ரசிகர்கள் மவுனமாக ரிலீசுக்கு காத்திருக்கின்றனர்!