துடில்லி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி அணி, 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை முறியடிக்கும் பஞ்சாப் அணியின் கனவு பஞ்சாக பறந்தது.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. டெல்லியின் பிரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த 15வது லீக் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதின.

ஆண்டர்சன் அசத்தல்:
இதில் முதலில் ‘டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு இம்முறை சத நாயகன் சாம்சன் (19) ஏமாற்றினார். பில்லிங்ஸ் (55), கோரி ஆண்டர்சன் (39*) கைகொடுக்க, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

சொதப்பல் துவக்கம்:
கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு வோஹ்ரா (3), ஆம்லா (19) சொதப்பலான துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த சகா (7), மார்கன் (22), மில்லர் (24) மேக்ஸ்வெல் (0) என எல்லா சர்வதேச வீரக்ர்ளும் சரிய, பஞ்சாப் அணி, தட்டுத்தடுமாறியது.

மட்டமான பினிஷிங்
பின் வரிசை வீரர்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சோபிக்கவில்லை. அக்‌ஷர் படேல் (44) மட்டும் ஆறுதல் அளிக்க பஞ்சாப் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

மிஸ்ரா ‘50’:
டெல்லியின் பிரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி வீரர் அமித் மிஸ்ரா, 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இம்மைதானத்தில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

188
ஐபிஎல் வரலாற்றில் டெல்லியின் பிரோஷா கோட்லா மைதானத்தில் இதற்கு முன் 188 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்தி வெற்றி பெற்ற அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தான். இப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும் சென்னை அணியே (186 ரன்கள்) உள்ளது.

* இதையடுத்து இம்மைதானத்தில் வெற்றிகரமாக இந்த இலக்கை துரத்தி தமிழக அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை தகர்க்கும் பஞ்சாப் அணியின் கனவு கலைந்தது.