சொல்லி அடிச்சா கில்லி, மிஸ் பண்ணாம அடிச்சா அது மெஸ்ஸி.. கால்பந்து சாம்ராஜ்யம் உருவானது இப்படித்தான்

வணக்கம் அன்பு வாசகர்களே. இந்தியால தான் இது பஸ். துபாய்ல இது குப்பலாரி என்பது போல தான் இருக்கும் கால்பந்து விளையாடும் நாடுகளில் கிரிக்கெட்டை பற்றி பேசினால். உலகம் முழுக்க பொதுவாக ஒரு விளையாட்டைப் பற்றி விவாதிக்கலாம் என்றால் அது கால்பந்து தான். கால்பந்து என்றதும் இந்தியர்களுக்கு சில வீரர்கள் ஞாபகம் வருவார்கள், பீலே, மரடோனா, மெஸ்ஸி, ரொனால்டோ, டேவிட் பெக்காம் போல. தற்போதைய கால்பந்தாட்டத்தின் இரு துருவங்கள் என்றால் அது மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தான். இந்த கட்டுரையில் மெஸ்ஸி பற்றி பார்ப்போம்.

உங்களுக்கு மெஸ்ஸியை தெரியுமா? என்று கேட்பதற்கு பதிலாக உங்களுக்கு உங்களுக்கு கால்பந்து தெரியுமா? என்று கேட்டாலே போதும். காரணம் மெஸ்ஸியும் கால்பந்தும் வேறு வேறு அல்ல. அவ்வளவு பிணைப்பு மெஸ்ஸிக்கு கால்பந்து மீது. மரடோனா பிறந்த அதே அர்ஜென்டினா தான் மெஸ்ஸிக்கும். இவர் அர்ஜெண்டினா நாட்டிற்காகவும் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் விளையாடுவதற்காக கோடானுகோடி ரசிகர்கள் போட்டிகளை காண்கிறார்கள்.

‘எனக்கு பிறகு சிறந்த கால்பந்து வீரராக நான் அர்ஜென்டினவில் நினைப்பது மெஸ்ஸியை தான். அவருடைய திறமை என்னை ஆச்சரியப் படுத்துகிறது. அவருக்கு எல்லையே இல்லை. என் சாதனைகளையும் அவர் முறியடிப்பார்’ என்று அப்போதே ஆரூடம் சொன்னார் மாரடோனா. அவரின் சொல்லுக்கு ஏற்ப நான்கு முறை ஃபிஃபா சிறந்த கால்பந்தாட்டகாரர் விருதை வென்று சாதனை படைத்தது உள்ளார்.

மெஸ்ஸியின் குடும்பம் வசதியானது அல்ல. நடுத்தர குடும்பத்தின் இன்னல்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே கால்பந்து மீது மோகம் கொண்டார் மெஸ்ஸி. ஆனபோதும் 11ஆம் வயதில் அவருக்கு வளர்ச்சி குறைபாடு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரை ஒப்பந்தம் செய்ய இருந்த அணியும் அவரது இந்த குறைபாட்டை போக்கும் மருத்துவ செலவை ஏற்றுகொள்ள தயாராக இல்லை.

மெஸ்ஸியின் திறமை மீது அபார நம்பிக்கை கொண்ட பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் சார்லஸ் ரிக்சாஸ் அவருக்கு ஒரு கைதுடைகும் நாப்கின்னில் எழுதி ஒப்பந்தம் போட்டார். அவருடைய மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்டார். அதன் மூலமாக மெஸ்ஸிக்கு வாழ்க்கையில் பெரும் திருப்பு முனை ஏற்பட்டது. இதற்காக அவர் அர்ஜென்டினா விட்டு ஸ்பெயின் சென்றார். 2004ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். மிக இளம் வயதிலேயே கோல் மழை பொழிந்து பலர் மனதில் இடம்பிடிதார்.

‘நான் மிகப்பெரும் முடிவை எடுக்கிறேன். அர்ஜென்டினாவை விட்டு ஸ்பெயின் செல்கிறேன். இது நான் காதலிக்கும் கால்பந்து விளையாட்டுக்காக. நிச்சயம் இதில் சாதிப்பென். இதற்காக நான் எனது சுகங்களை தவிர்க்கிறேன்’ என்று கூறியிருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்பு வீன் போகவில்லை. மெஸ்ஸி தன்னை மென்மேலும் செதுக்கினார். 2006-07க்குள் நடந்த 26 போட்டிகளில் 16 கோல்கள் அடித்து அசத்தினார். உலகம் அவரை ரசிக்க தொடங்கியது. அவரது கால்கள் போடும் நடனத்தை வீதிகளில் பிள்ளைகள் பின்பற்ற ஆரம்பித்தனர். அப்போது அவருக்கு வயது 20 தான்.

2010ஆம் ஆண்டு இன்னும் சிறப்புடன் விளங்கினார். 47 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். அதோடு விட்டாரா மெஸ்ஸி? அதுதான் இல்லை. மேலும் மேலும் சிறப்பாக விளையாட தொடங்கினார். 2012ஆம் ஆண்டு, ஓர் 40 ஆண்டுகால சாதனையை முறியடிக்க போகிறார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முள்ளர் அவர்களின் சாதனையான 85 கோல்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

ஒருமுறை அறிவிக்க இயலாத ரஷிய கால்பந்து அணி ஒன்று மெஸ்ஸிக்கு 20மில்லியன் டாலர் சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய முற்பட்டது. ஆனாலும் மெஸ்ஸி அதனை நிராகரித்தார். அதனை ஏற்றிருந்தால் அவர்தான் உலகின் அதிக பணம் ஈட்டும் வீரராக இருந்திருக்க கூடும். பார்சிலோனா அணிக்காக விளையாடுவதை அவர் பெருமையாகவும் நன்றியாகவும் பார்த்தார். ‘ என்னால் பார்சிலோனா விட்டு வெளியேற முடியாது. நான் இன்று இருக்கும் நிலமைக்கு அவர்கள் தான் காரணம்.. அவர்களைவிட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை ‘ என்று கூறினார்.

ஓர் வீரரின் உன்னத வெற்றி அவரது எதிராள் எப்படி அவரை மதிப்பீடு செய்கிறார் என்பதை பொறுத்தே அமையும். அந்த வகையில் மெஸ்ஸி யின் ஆகசிறந்த போட்டியாளரான, ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரைப்பற்றி குறிப்பிடும்போது, ‘ அவரும் பெரிய அணிக்காக, விளையாடுகிறார், நானும் அப்படியே. அவர் திறமையான வீரர், நானும் அப்படியே. அவருடைய நுணுக்கங்கள் சிறப்பானதாக இருக்கிறது, என்னுடையதும் அப்படியே. ஆனபோதும் தற்போதைய நிலையில், அவரே சிறந்த வீரர் ‘ என்று குறிப்பிடுகிறார்.

மெஸ்ஸி ஒருநாளும் போட்டியை விதிகளுக்கு மீறி ஆட பார்த்தது இல்லை. அவரிடம் மைதானத்தில் இருக்கும் நேர்மை, அவர் வாழ்க்கையில் பயின்றது. அவரது பெற்றோர்கள், அவரது பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுத்தது. அதனை அவர் விளையாட்டுகளில் பின்பற்றினார். அதன் காரணமாக வெறுப்பாளர்களே இல்லாத அளவுக்கு பிரகாசித்தார். பந்தை லாவகமாக ஏமாற்றி கொண்டு சென்று கோல் நடிக்கும்போதும் சரி, தனது அணி வீரர்களுக்கு கோல் அடிக்க பாஸ் செய்யும்போதும் சரி அவர் ஒரே மாதிரியாக இருந்தார். அவர் சகவீரர்களுக்கு கோல் அடிக்க செய்த பாஸ்களையும் இவர் கணக்கில் கோலாக சேர்த்தால், இந்நேரம் இவரது எண்ணிக்கை இரு மடங்காகி இருக்கும்.

மெஸ்ஸியை கால்பந்தாட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல், யார் வேண்டுமானால் அவரது நேர்மை, அர்ப்பணிப்பு, நன்றி மறவாமை, திறமை போன்றவற்றிற்காக பின்பற்றலாம். அவர் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க இயலாது! அதே நேரம், அவரைப்போல நல்ல மனிதரையும் பார்க்க இயலாது என்றும் அடித்து கூற இயலும்!!!

Next Story

- Advertisement -