சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கிய ஆரம்பப் புள்ளியே ஜெயலலிதாவால் வளர்ப்பு மகன் என அறிவிக்கப்பட்ட சுதாகரனின் பிரமாண்டத் திருமணம்தான். அந்தத் திருமணத்தின்போது ஜெயலலிதா அணிந்திருந்ததுதான் இந்த பிரமாண்ட ஒட்டியானம்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே கலர் பட்டுச் சேலையில், இந்த ஒட்டியானத்தை அணிந்திருந்த புகைப்படத்தை மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை. இந்த ஒட்டியானத்தைப் பார்த்துத்தான் அப்போதைய சிறப்பு நீதிபதி சம்பந்தம் ஆச்சரியமடைந்தார்.

ஜெயலலிதா, சசிகலாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மதிப்பிடும் பணி 2000மாவது ஆண்டுதான் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவின் சொத்துக்கள் அதாவது நகைகள் 3 பெரிய பெட்டிகளில் வைத்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 3 பெரிய சூட்கேஸ்களில் கொண்டு வரப்பட்ட நகைகளை அப்போதைய தனி நீதிபதி சம்பந்தம் பார்வையிட்டார்.

இதில் ஜெயலலிதாவின் ஒட்டியானம்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மொத்தம் 1044 கிராம் எடை கொண்டது அந்த ஒட்டியானம். அதில் மொத்தம் 2389 வைரக் கற்கள், 18 எமரால்டு, 9 ரூபி கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நீதிபதி சம்பந்தம் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

1995ம் ஆண்டு நடந்த சுதாகரன் திருமணத்தின்போது ஜெயலலிதாவும், சசிகலாவும் இந்த ஒட்டியானங்களை அணிந்திருந்தனர். ஜெயலலலிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத பல பாடங்களைக் கற்றுக் கொடுத்த சம்பவம் அது. சொத்துக் குவிப்பு வழக்கின் மூலாதாரமும் இதுதான்.

அதேபோல கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இன்னொரு காட்சிப் பொருள் ஜெயலலிதாவின் சொகுசுப் பேருந்து. மும்பையைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் இந்த பஸ்ஸை வடிவமைத்திருந்தார். சென்னை கோர்ட்டுக்கு இது கொண்டு வரப்பட்டபோது பத்திரிகையாளர்கள் ஆர்வத்துடன் இதை வேடிக்கை பாரத்தனர்.

ஷவருடன் கூடிய பாத்ரூம், கான்பரன்ஸ் டேபிள், டிவி, தொலைபேசி என சகல வசதிகளும் இந்தப் பேருந்தில் இடம் பெற்றிருந்தது. குளிரூட்டப்பட்ட பேருந்து அது. பஸ்ஸை வாங்கி அதில் இந்த சீக்கியர் பல மாறுதல்களை ஜெயலலிதாவுக்காக செய்து கொடுத்திருந்தார். இதேபோன்ற பஸ்ஸை நடிகை ஸ்ரீதேவிக்கும் வடிவமைத்துக் கொடுத்ததாக அவர் பெங்களூர் கோர்ட் விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

மேலும் விசாரணையின்போது, நானே இந்த பஸ்ஸை போயஸ் தோட்டத்துக்குக் கொண்டு போய் டெலிவரி கொடுத்ததாகவும் அவர் கூறினார். பஸ்ஸை ஜெயலலிதாவிடம் கொடுத்தீர்களா என்று நீதிபதி கேட்டபோது, சசிகலாவிடம் கொடுத்ததாக கூறினார் அந்த சீக்கியர். இதில் இன்னொரு காமெடி என்ன தெரியுமா.. விசாரணை நீண்ட நேரம் நீடித்ததால் அந்த சீக்கியர் மும்பை போக வேண்டிய விமானத்தைத் தவற விட்டு விட்டது.. இதையடுத்து கோர்ட்டே அவர் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது!