Tamil Cinema News | சினிமா செய்திகள்
இம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என பெயர் வைத்ததன் சுவாரசிய பின்னணியை சென்னை நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.
ஐபிஎல் நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருட தடைக்கு பிறகு திரும்பி இருக்கிறது. இதனால், சென்னை ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு போட்டியும் கடைசி நேர திரில்லை தக்க வைத்து கொண்டே வருகிறது. அதுபோல, இந்த வருடம் சென்னை அணியில் பல திறமையான வீரர்கள் ஏலமெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும் சென்னை அணிக்கு விளையாடுவதை பெருமையாக கருதுகின்றனர். இதனால், தங்கள் சமூக வலைத்தள பக்கங்களுக்கு ஒரு தமிழரை தேர்ந்தெடுத்து பதிவுகளை தமிழில் போட்டு, ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்து வருகின்றனர். இதில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹைலைட்டாக பஞ்ச் டயலாக்குகளில் பந்தாடுகிறார். இதனால், தான் என்னவோ இந்த வருட சென்னை அணி வீரர்களுக்கு சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சுவாரசியமான சில பட்டப்பெயர்களை வைத்திருக்கிறது.
இதில், எப்போதும் போல தோனிக்கு தல, ரெய்னாவிற்கு சின்ன தல என்ற பெயர்களே நீடிக்கிறது. அதிலும், இம்ரான் தாஹிருக்கு சென்னை நிர்வாகம் பராசக்தி எக்ஸ்பிரஸ் என பெயர் வைத்தது. அட வித்தியாசமா இருக்கே என ரசிகர்கள் கொண்டாடி தொடங்கி விட்டனர். ஆனால், ஒரு ரசிகர் இம்ரான் தாஹிருக்கு ஏன் இந்த பெயர்? யாரும் என் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் என சென்னை அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் டூவிட் தட்டினார்.
அதற்கு பதில் அளித்துள்ள சென்னை அணி, சிவாஜி கணேஷனின் அறிமுக படமான பராசக்தி படத்தில் ஓடினேன், ஓடினேன் என்ற எவர்கீரின் வசனம் இடம்பெற்று இருக்கும். அதனாலே, இம்ரானுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது என டூவிட்டியது. அட, விக்கெட் எடுத்தா 2 கிலோமீட்டருக்கு ஓடினா இந்த பெயர் தான் வைப்பாங்களாம்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிரை 1 கோடி ரூபாயிற்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
