சென்னை: முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு, வித்தியாசமான ஸ்டைலில் சென்னை ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. சர்வதேச அரங்கில் ஐசிசி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர். ஆனால் அந்த கர்வம் தலையில் சிறிதும் இல்லாத தோனி, தன்னைவிட ஜூனியர் வீரர்களுக்கு கீழ் விளையாட முடியும் என்பதை ஜாம்பவான் சச்சினுக்கு பின் செயல்படுத்தியவர்.

களத்தில் எப்போதும் மிகவும் கூலாக காணப்படும் தோனிக்கு, ரசிகர்கள் கூல் கேப்டன் என்ற செல்லப்பெயரும் வைத்துள்ளனர். தவிர, இந்தியாவில், கடந்த 2008 முதல் நடக்கும் உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு கேப்டன் பொறுப்பேற்ற தோனி, இன்று வரை தமிழக ரசிகர்கள் மத்தியில் செல்லப்பிள்ளையாகவே திகழ்கிறார்.

இவர் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் மீது உள்ள பாசத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வழக்கமான ஸ்டைலில் வெளிப்படுத்தியுள்ளனர். இவரது பிறந்தநாளுக்கு, கிட்டத்ததட்ட சினி நட்சட்த்திரங்கள் பாணியில் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதில், எங்க தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள், இந்த சிங்கத்துக்கு எவர் நிகர் என அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதையும் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.

‘தல’ தோனி மீது தமிழர்கள் வைத்துள்ள பாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.