லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நிச்சயம் இந்திய அணியை வெல்வோம் என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் இந்திய அணி, முதல் லீக் போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் மனதளவில் தயாராக இருப்பதாகவும், அது நிச்சயம் போட்டியின் போது தெரியவரும் எனவும் அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிக்கி ஆர்த்தர் கூறுகையில்,’ இந்திய அணிக்கு எதிரான போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக தயாராகியுள்ளனர். வெளியில் கத்திக் கொண்டிருப்பவர்கள், கத்திக்கொண்டே தான் இருப்பார்கள். ஆனால், பாகிஸ்தான் அணியின் டிரெசிங் ரூம் மிகவும் அமைதியாக உள்ளது. இது வெற்றிக்கு மிகவும் முக்கியம். பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டிக்கு எப்போதோ தயாராகி விட்டனர் . ’ என்றார்.