ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கோஹ்லி அரை சதம், குல்தீப் ‘ஹாட்ரிக்’ கைகொடுக்க இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 100வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (7) ஏமாற்றினார். பின் இணைந்த ரகானே, கேப்டன் கோஹ்லி ஜோடி அபாரமாக விளையாடியது. கோஹ்லி, அரைசதமடித்தார். தன்பங்கிற்கு ரகானேவும் அரை சதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது ரகானே (55) ரன் அவுட்டானார்.

மணிஷ் பாண்டே (3) ஏமாற்றினார். கூல்டர் நைல் ‘வேகத்தில்’ கேதர் ஜாதவ் (24) சிக்கினார். சிறப்பாக விளையாடிய கோஹ்லி (92) சத வாய்ப்பை தவறவிட்டார்.தோனி 5 ரன்களில் வெளியேறினார்.

குல்தீப் டக்-அவுட்டானார். ரிச்சர்ட்சன் ‘வேகத்தில்’ புவனேஷ்வர், பாண்ட்யா தலா 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். சகால் ஒரு ரன்னில் கிளம்ப, இந்திய அணி 50 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கூல்டர், கம்மின்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு புவனேஷ்வர் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ கார்ட்ரைட் (1), வார்னர் (1) ஆட்டமிழந்தனர். ஹெட் 39 ரன்களில் அவுட்டானார். சகால் ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (14) சிக்கினார். ஸ்மித் (59) அரை சதம் கடந்தார்.பின், குல்தீப் ‘சுழல்’ ஜாலம் காட்டினார். இவர் வீசிய 33வது ஓவரின் 2வது பந்தில் வேட் (2) சிக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், 3,4வது பந்தில் ஏகார், கம்மின்சை டக்-அவுட்டாக்கி, முதல் முறையாக ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். ரிச்சர்ட்சன் டக்-அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவரில் 202 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டாகி’ வீழ்ந்தது. ஸ்டாய்னிஸ் (62) மட்டும் அவுட்டாகாமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குல்தீப் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

ஒரு நாள் அரங்கில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய வீரரானார் குல்தீப். இதற்கு முன், சேட்டன் சர்மா (எதிர்- நியூசி.,-1987, நாக்பூர்), கபில் தேவ் (எதிர்- இலங்கை, கோல்கட்டா, 1991) இந்த இலக்கை எட்டி இருந்தனர்.