‘லிங்கா’ படத்தின் நஷ்டத்திற்காக தாணு தரப்பு ஒப்புக் கொண்ட பணத்தைத் தராததால் ‘கபாலி’ படத்தை வெளியிட தடைகேட்டு விநியோகஸ்தர் தொடர்ந்த வழக்கு இன்று(வியாழன்) விசாரணைக்கு வருகிறது. இதனால் கபாலி ரிலீஸ் தள்ளிப்போகுமோ என பதற்றமடைந்திருக்கிறது படத் தயாரிப்புக்குழு.

சென்னை சுக்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவர் மகாபிரபு. இவர், ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘எங்கள் நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்களை விநியோகம்  செய்யும் தொழில் செய்து வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரித்தார். இந்தத் திரைப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த நிறுவனத்துக்கு ரூ.13.25 கோடியைக் கொடுத்து, இந்தத் திரைப்படத்தை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விநியோகம் செய்யும் உரிமத்தைப் பெற்றோம்.

கடந்த 2014–ம் ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று வெளியான இத்திரைப்படம், எதிர்பார்த்த அளவு லாபம் தரவில்லை. இதனால், எங்கள் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.7.45 கோடி நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள், நஷ்டஈடு வழங்கும்படி, இந்தப் படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தோம்.

இதையடுத்து படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷ், இழப்பீடு தருவதாக உறுதியளித்தார். இதுநாள் வரை அதை அவர் தரவில்லை. அதன்பிறகு, ரஜினிகாந்தும், ராக்லைன் வெங்கடேசும் சேர்ந்து, அனைத்து விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரூ.12.50 கோடி இழப்பீடு வழங்கினார்கள். இதில், கோவை மண்டலத்துக்கு ரூ.2.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ரூ.1.70 கோடியை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கிவிட்டனர். மீதமுள்ள ரூ.89 லட்சத்தை எங்கள் நிறுவனத்துக்கு இதுவரை தரவில்லை.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ என்ற திரைப்படத்தை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் தயாரிக்கப்படும்போதே, ‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக வழங்க வேண்டிய ரூ.89 லட்சத்தை, தானே வழங்கி விடுவதாக எங்களுக்கு கலைப்புலி எஸ்.தாணு உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், அந்தப் பணத்தை அவர் இன்னும் தரவில்லை. எனவே, எங்களுக்கு தரவேண்டிய ரூ.89 லட்சத்தை வழங்கும் வரை, ‘கபாலி’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு,  நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று(புதன்)விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு ‘ராக்லைன்’ வெங்கடேஷ், வேந்தர் மூவிஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நீதிமன்றத்தில் கபாலி தொடர்பான வழக்கினால் திட்டமிட்டபடி அல்லாமல், கபாலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமோ என தயாரிப்பாளர் தரப்பு பதற்றத்தில் உள்ளது.