சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன், டிஆர்பி யில் முன்னிலை வகித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீசன்களும் வெற்றிகரமாக முடிவடைந்தது. அதிலும் இரண்டாவது சீசன் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அதில் போட்டியாளராக பங்கேற்ற நடிகர் அஸ்வின் மட்டும் தான்.
அதைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் கடந்த சீசன்களை காட்டிலும் பல சுவாரசியமான நாம் எதிர்பார்க்காத போட்டியாளர்களும், கோமாளிகளும் பங்கேற்க உள்ளனர்.
அதில் பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா போன்ற பழைய கோமாளிகள் உடன் சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன் உள்ளிட்ட சிலரும் புதிதாக இணைந்துள்ளனர். இதில் சூப்பர் சிங்கர் பரத்திற்கு நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். இதன் மூலம் அவர் வேற லெவலுக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த சீசன் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்த நிலையில் பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்களும் போட்டியாளர்களாக இதில் பங்கேற்க உள்ளனர்.
அதில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ரோஷிணி மீண்டும் இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து அசுரன், ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமான அம்மு அபிராமி, நடிகர் மனோபாலா, பாடகர் ஆண்டனி தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன் வித்யுலேகா ராமன், தர்ஷன், ஸ்ருதிகா, க்ரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இவர்களுடன் இணைந்து ரக்சன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் முதல் சனி, ஞாயிறுகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த செய்தியால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்