தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான பேட்டியையடுத்து, அதிமுகவில் பெரும் பதற்றமும், பல்வேறு குழப்பங்களும் நீடித்து வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் அரசியல் வட்டாரத்தில் மோதல்கள் நீடித்துவருகிறது.

மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 5 எம்எல்ஏக்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் அவரின் வீட்டுக்கே சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் தற்போது ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

அதிமுகவின் மீதமுள்ள 130 எம்எல்ஏக்களை சசிகலா தரப்பில், ரகசிய இடத்தில் வைத்து பாதுகாத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் மேலும் சில எம்எல்ஏக்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பின், இளைஞர்களுக்காக தற்போது உறுவாகியுள்ள ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ சசிகலா குடும்பத்தாரால் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்க களமிறங்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பேஸ்புக் தளத்தில்…

‘‘தமிழகத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 130 எம்எல்ஏக்களை காணவில்லை. அவர்களை யாராவது கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவர்களை எங்களுக்கு மீட்டுத்தந்து பாதுகாக்குமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் அவரவர் தொகுதி சார்ந்த காவல்நிலையங்களை அணுகி புகார் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்’’ என்ற பதிவை இன்று பதிந்துள்ளனர்.