Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்க்கு செல்போன், அஜீத்துக்கு துப்பாக்கி! – இன்டர்வெல் க்ளிஷேக்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு செல்போன், அஜீத்துக்கு துப்பாக்கி! – இன்டர்வெல் க்ளிஷேக்கள்!

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் கதைதான் ‘அடுத்தது இதாம்ப்பா’ என கணிக்கக் கூடிய லெவலில் இருக்கும். சமீப காலமாய் இன்டர்வெல் காட்சிகளே அப்படித்தான் இருக்கின்றன. ‘இந்த ஹீரோ இதைப் பண்றப்போ கரெக்ட்டா தீம் மியூசிக் அலறும். உடனே இன்டர்வெல் கார்டு போடுவாங்க’ என பால்வாடிப் பையன்களே இதை கணித்துவிடுகிறார்கள். அப்படி நண்டு சிண்டுகள் கூட கணித்துவிடும் சில ஹீரோக்களின் இன்டர்வெல் க்ளிஷேக்கள் இவை.

விஜய்:

இந்த லிஸ்ட்டில் முதலிடம் தளபதிக்குத்தான். சண்டை இல்லாத இன்டர்வெல் காட்சிகளே இவர் படத்தில் இருக்காது. முன்பெல்லாம் சண்டை முடிந்தவுடன் கரெக்ட்டாக கார்டு போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் சண்டை முடிந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க தளபதி நிற்கும்போது கரெக்ட்டாய் போன் அடிக்கும். அந்தப் பக்கம்? வேற யாரு வில்லன்தான். ‘நீ எங்க இருந்தாலும் உன்னைத் தேடி வருவேன்’ என கரகர குரலில் சொல்ல, ‘ஹேஹேஹேஹேய்’ என பெரிதாக சிரித்து பஞ்ச் பேசி போனை வைப்பார் தளபதி. ‘துப்பாக்கி’, ‘கத்தி,’ ‘பைரவா’… இன்னும் எத்தனை தளபதி தோழர்?

அஜீத்:

தளபதிக்கு கேட்ஜெட் என்றால் தலக்கு வெப்பன். கும்பலாய் இருக்கும் இடத்தில் அஜீத் துப்பாக்கியை தூக்கிவிட்டாரென்றால் இன்டர்வெல் கம்மிங் சூன் என்பதை அறிக. படபடவென ஓடி, உருண்டு, பறந்து சுட்டு சின்ன கீறலோடு வெளியே வரும்போது இன்டர்வெல் போர்டு வைப்பார்கள். இந்திய ராணுவம் செலவழிக்கும் தோட்டாக்களை விட அஜீத் இன்டர்வெல்லில் அதிகம் செலவழிக்கிறார் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. பில்லா, மங்காத்தா, வேதாளம் என இந்த லிஸ்ட் ரொம்பப் பெருசு.

சூர்யா:

என்னதான் வேதாளம் ட்ரான்ஸ்பர்மேஷன், தெறி ட்ரான்ஸ்பர்மேஷன் என ஆயிரம் வந்தாலும் இது எல்லாவற்றுக்கும் சூப்பர் சீனியர் ‘அஞ்சான்’ ட்ரான்ஸ்பர்மேஷன்தான். சென்டிமென்ட்டோ என்னவோ அதன்பின் நடித்த படங்களில் எல்லாம் ட்ரான்ஸ்பார்ம் ஆகிக்கொண்டே இருக்கிறார். ‘மாஸ்’ படத்தில் மனுஷனாக இருந்து பேயாக ட்ரான்ஸ்பார்மேஷன், ’24’ படத்தில் இறந்துபோய் திரும்பவும் வரும் ட்ரான்ஸ்பர்மேஷன் என விரட்டி விரட்டி மாறுகிறார். சிங்கம் 3 ல நிஜமாவே சிங்கமா மாறுவாரோ?

சிம்பு:

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் என்பதால் சிம்பு படத்தின் இன்டர்வெல் க்ளிஷேக்களை ஞாபகம் வைத்துக்கொள்வதற்கே தனி சக்தி வேண்டும். கேமராவைப் பார்த்து ‘கல்யாணங்கிறது… வாழ்க்கைங்கிறது… என தத்துவம் பேசினாலோ, ‘சின்னக் குழந்தைகளா… கண்ணை மூடிக்கோங்க’ என வாய்ஸ் ஓவரில் அறிவுரை சொன்னாலோ பப்ஸ், பாப்கார்ன் வாங்க வேண்டிய நேரம் என்பதை உணர்க. ‘போடா போடி’, ‘வாலு’, ‘அச்சம் என்பது மடமையடா’ என சில பல ஆண்டுகளாய் வெளியான இந்தப் படங்களில் இதுதான் நடக்கிறது பாஸ்!

விஷால்:

இவர் பஸ் ஏறி போகாத மாவட்டங்களே தமிழ்நாட்டில் இல்லை. இதனால் இவரின் நிறைய சண்டைக்காட்சிகள் பஸ் ஸ்டாண்டில்தான் நடக்கின்றன. கம்பு, கட்டை, செவனே என நின்றுகொண்டிருக்கும் பஸ் பம்பர் என எல்லாவற்றையும் கையில் எடுத்து சுற்றுவார். ஆனால் படம் முழுக்க இப்படித்தான் செய்துகொண்டிருப்பார் என்பதால் இதை மட்டும் வைத்து இன்டர்வெல்லை முடிவு செய்ய முடியாது. அடித்துத் துவைத்துவிட்டு ‘ஏய்ய்ய்ய்ய்ய்’ என தொண்டை வறள கத்தி, ‘நான் மதுரைதான்’, ‘பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை எல்லாம் பார்த்தவன்டா’, பழனிக்கு நான்தான்டா மொட்டை போடப்போறேன்’ என ஊர் பேர் சொல்லி பன்ச் பேசினால்.. அதேதான்!

லாரன்ஸ்:

தமிழ் சினிமா இப்போதுவரை விடாமல் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் காமெடி பேய்ப்படங்களின் ட்ரெண்டை தொடங்கி வைத்த புண்ணியவான். ‘முனி’, ‘முனி 2’, ‘முனி 3’ என எடுத்துக்கொண்டே இருக்கிறார். பேய்ப்படங்கள் என்பதால் இன்டர்வெல் விட ஒரே ஒரு வாய்ப்புதான். அதுவரை கண்ணாமூச்சி ரே ரே ஆடிக்கொண்டிருந்த பேய், கேமரா முன்னால் க்ளோசப்பில் தரிசனம் தந்து மண்டையை உலுப்பும். அப்புறமென்ன… டீ… காபி… சமோசா!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top